நடிகை மீனா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சில மாதங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி ஒன்ற ஒன்றுக்கு தன்னை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார் மீனா. இதோ அவை உங்களுக்காக...






திருமணத்திற்கு முன்... பின்....!


சினிமாவில் நான் இத்தனை ஆண்டுகள் இருக்கிறேன் என கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கவில்லை. இந்த நிலைக்கு வருவேன் என.  என் அம்மா தான் அனைத்திற்கும் காரணம். என் குடும்பத்தில் யாரும் சினிமாவை சேர்ந்தவர்கள் இல்லை. இவ்வளவு பெரிய பயணமாக இது இருக்கும் என நான் நினைக்கவில்லை. திருமணத்திற்குப் பின் முந்தைய மாதிரி சினிமா வாய்ப்பு இருக்காது. திருமணத்திற்கு முன், எங்கு போனாலும் மீனா மீனா என்பார்கள். ஆனால், திருமணத்திற்கு பின் இது இருக்காது , அல்லது இது நீண்ட நாள் இருக்காது என்பதை என் அம்மா என்னிடம் கூறிக் கொண்டே இருப்பார். அது தான் என்னை பக்குப்படுத்திக் கொள்ள உதவியது. 


திருமணத்திற்கு பிறகும் நான் பிஸியாக இருப்பேன் என நான் எதிர்பார்க்கவில்லை. கல்யாணத்திற்கு முன் ரொம்ப சாஃப்ட். அம்மா சொல்வதை தான் நான் கேட்பேன். அவர் சொல்வதை மட்டும் தான் கேட்பேன். வெளி உலகமே தெரியாமல் இருந்தது. அவர் என்னை அனைத்துமாக பாதுகாத்தார். உண்மையான வாழ்க்கை என்ன என்பதே எனக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், கல்யாணத்திற்குப் பின், மெது மெதுவாக வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட்டது. நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன். 


தனுஷ்... விஜய்சேதுபதி ஆர்வம்!


நான் தாயான பின் எனக்கு தைரியம் அதிகமாகிவிட்டது. திருமணத்திற்கு முன் இருந்த மீனாவுக்கும், இப்போது இருக்கும் மீனாவுக்கும் நிறைய வித்யாசம் உள்ளது. அதிர்ஷ்டம் மிக முக்கியம். அது எனக்கு இருக்கிறது என்று நினைக்கிறேன். தனுஷ் மற்றும் விஜய்சேதுபதி உடன் நடிக்கவில்லையே என்கிற வருத்தம் என்னிடம் உள்ளது. அவர்கள் இருவரும் நல்ல நடிகர்கள். நடிப்புக்கு அவர்களிடத்தில் நல்ல ஸ்கோப் கிடைக்கும் என நினைக்கிறேன். 


விஜயசாந்தி மாதிரி சண்டை போடும் கதாபாத்திரங்கள் நிறைய வந்தது. ஆனால், அதை என்னால் செய்ய முடியுமா என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது. அதை விட பயம் இருந்தது. அதனால் அந்த முயற்சியை நான் எடுக்கவில்லை. இப்போ வேண்டுமானால் அதை செய்யலாம். நான் பேமஸாக இருந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் செல்வாக்கு இல்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு. இப்போது நாம் சொல்ல நினைப்பதை ரசிகர்களிடம் நேரடியாக கொண்டு செல்ல முடியும். அப்போது நான் சொல்ல நினைப்பது, ரசிகர்களிடம் முழுமையாக போய் சேராது. சில நேரங்களில் நாம் சொல்லாதது கூட போய் சேர்ந்து விடும். இப்போது அந்த பிரச்சனை இல்லை. அப்போது சோஷியல் மீடியா இல்லையே என்கிற வருத்தம் இருக்கிறது. அப்போது இருந்திருந்தால், எனக்கு இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.


வாழ்வில் மறக்க முடியாத பெருமை!


சத்யராஜ், கமல் போன்றவர்கள் பெண்கள் கெட்டப்பில் நடித்திருக்கிறார்கள். ஆனால், அர்விந்த்சாமி புடவையில் அழகாக இருப்பார். நாகேஸ்வரராவ் உடன் தெலுங்கு படம் நடித்திருக்கும் போது, அந்த படம் தான் எனக்கு முதல் படம். எனக்கு பெரிய ஹிட் கொடுத்தது. என்னை அடையாளப்படுத்தியது. நாகேஸ்வரராவ் என்னை மிகவும் உயர்வாக பாராட்டினார். அவர் பாராட்டியது தான், எனக்கு வாழ்வில் பெருமையான விசயம். 


கஸ்தூரி ராஜா சார் கதை சொல்லி, என் ராசாவின் மனசிலே படத்தின் கதைக்குள் என்னை கொண்டு வந்தார். பாதி வந்தாலும் மிக முக்கியமான கதாபாத்திரம் என அவர் தான் என்னை சம்மதிக்க வைத்தார். மதுரை ஸ்லாங்கில் பேசும் டயலாக் ஒன்றை பேசச் சொன்னார். நானும் பேசினேன். எனக்கே அது 100 சதவீதம் திருப்தி இல்லை. கேமரா முன் நன்றாக வரும் சார் என்று கூறினேன். அதையும் மீறி எனக்கு அந்த நம்பிக்கை கொடுத்தார். 


த்ரிஷ்யம் மறுப்பு!


த்ரிஷ்யம் என்னோட ‛கம் பேக்’ மூவி. கதை கேட்டு எனக்கு ரொம்ப பிடித்தது. எப்போது எனக்கு குழந்தை மிக சிறியவளாக இருந்தாள். அதனால் என்னால் படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டேன். அவங்களும் புரிந்து கொண்டு சென்றுவிட்டார்கள். பின்னர் அவர்களே வந்து, நீங்கள் வந்தால் தான் சரியாக இருக்கும். உங்கள் வசதிக்கு தேவையானவற்றை செய்து தருகிறோம் என்று கூறினார்கள். லால் சார் தயாரிக்கும் படம்; என்னால் மறுக்க முடியவில்லை. 


சினிமா உலகில் மகேஸ்வரி எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். பின்னர் குஷ்பூ, சங்கவி, ரோஜா போன்றோர் உடன் நல்ல நட்பு இருந்தது. சிட்டிசன் படத்தில் ரொம்ப சிரமப்பட்டு நடித்தேன். கடற்கரை மணலில் சூட்டோடு நடித்தோம். அப்போது தான் மீனவர்களின் சிரமம் புரிந்தது. 






கிளார் மீது விருப்பம்!


கிளாமரை விட எனக்கு குடும்பபாங்கான கதாபாத்திரங்கள் தான் அதிகம் கிடைக்கும். கிளாமர் ஹீரோயின்களை பார்த்து பொறாமயைாக இருக்கும். எனக்கு எப்போது பார்த்தாலும், கிழிந்த புடவை, தாவனி, பாவாடடை என இப்படி தான் கதாபாத்திரம் இருக்கும். இதனால் எனக்கு கிளாமர் ரோலில் நடிக்கும் நடிகைகளை பார்த்து பொறாமையாக இருக்கும். 


நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தை சிவாஜி சார் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, திருமணத்தில் என்னை பார்த்து, இயக்குனரிடம் கூறிவிட்டார். என் வீட்டிற்கு இயக்குனர் வந்து, என் அம்மாவை சந்தித்தார். ‛இங்கே ஒரு பாப்பா இருக்காமே..’என்று இயக்குனர் கேட்டுள்ளார். ‛ஆமாம் இருக்கு... ப்ளே ஸ்கூல் போயிருக்கு’ என அம்மா கூற, இல்லை, அவரை நடிக்க சார் கேட்டு வரச்சொன்னார் என்று விசயத்தை கூற , அது ஒரு ஆண் குழந்தை பாத்திரம். அதற்காக என் முடியை வெட்ட கூறியுள்ளனர். அதற்கு என் தாய் மறுக்க, எனக்காக அந்த கதாபாத்திரத்தை பெண் குழந்தையாக மாற்றினர். அப்படி தான் என் பயணம் தொடங்கியது,’’


என்று அந்த பேட்டியில் மீனா கூறியுள்ளார்.