தனக்கு இயக்குநர் சீனு ராமசாமி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு, நடிகை மனிஷா யாதவ் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். 


கூடல் நகர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. இவர் தென்மேற்கு பருவகாற்று, தர்ம துரை , கண்ணே கலைமானே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவர் 2018 ஆம் ஆண்டு “இடம் பொருள் ஏவல்” என்ற படத்தை இயக்கினார். இயக்குநர் என்.லிங்குசாமி தயாரித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பலரும் நடித்திருந்தனர். நிதி பிரச்சினை காரணமாக இப்படம் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. 


இப்படியான நிலையில் இடம் பொருள் ஏவல் படத்தில் நந்திதா ஸ்வேதா கேரக்டரில் முதலில்  வழக்கு எண் 18/9 படத்தில் நடிகையாக அறிமுகமான மனிஷா யாதவ் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின் அவருக்கு பதிலாக நந்திதா நடித்தார். சில படங்களில் நடித்த மனிஷா யாதவ் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார். இதற்கிடையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி, சில தினங்களுக்கு முன் நேர்காணல் ஒன்றை அளித்திருந்தார். 


அதில் இடம் பொருள் ஏவல் படத்தில் மனிஷா யாதவ் நடித்த போது, இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்றது. அப்போது இயக்குநர் சீனு ராமசாமி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும், இதனை மனிஷா தனக்கு போன் மூலம் தெரிவித்ததாகவும், எல்லா ஆதாரமும் இருப்பதாகவும் கூறி அதிர வைத்தார். மேலும் சீனு ராமசாமியால் தான் மனிஷா சினிமாவை விட்டே விலகி விட்டார் எனவும் தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த குற்றச்சாட்டு பதிலளிக்கும் வண்ணம் சீனு ராமசாமி எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதனுடன் ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகை மனிஷா யாதவ் தனக்கு நன்றி தெரிவித்த வீடியோவை இணைத்திருந்தார். அந்த பதிவில், “வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிடாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார் ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க” என கூறியிருந்தார். 


இந்நிலையில் பிஸ்மியின் குற்றச்சாட்டுக்கு நடிகை மனிஷா யாதவ் பதிலளிக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் மௌனம் எதையுமே குறிக்காது. என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் சொல்லலாம். அதனை நான் தெளிவுப்படுத்துகிறேன். நான் ஏன் சீனு ராமசாமி படத்தில் நடிக்கப் போகிறேன்?. ஒரு குப்பைக் கதை ஆடியோ வெளியீட்டு விழாவின் மேடையில் சீனு ராமசாமி இருந்ததால் நன்றி தெரிவித்தேன். என்னுடைய வார்த்தையை ஒப்புக் கொள்கிறேன்.


9 ஆண்டுகளுக்கு முன்பு நான் மேடையில் பேசிய எதுவும் மாறாது. ஆனால் ஒருமுறை என்னிடம் மிகவும் அவமரியாதையாக இருந்த ஒருவருடன் நான் ஏன் வேலை செய்ய வேண்டும். சீனு ராமசாமி சார் உண்மையை பேசுங்கள்” என கேட்டுள்ளார். இதன்மூலம் சீனு ராமசாமி மீதான குற்றச்சாட்டை மனிஷா யாதவ் ஒப்புக்கொள்கிறாரா? என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது.