டாக்டர் அம்பேத்கரின் வாசகத்தை பகிர்ந்து நடிகை மாளவிகா மோகனன் குடியரசு தின வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த பதிவை நீக்கியுள்ளார்.


மாளவிகா மோகனன்


தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் இவர் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் தங்கலான் படத்தில்  நடித்துள்ளார் மாளவிகா மோகனன். விக்ரம் , பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் தங்கலான் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருக்கிறது.


அம்பேத்கர் வாசகத்தைப் பகிர்ந்து குடியரசு தின வாழ்த்து


சமீபத்தில் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக மலையாள நடிகை பார்வதி மற்றும் இயக்குநர் ஆஷிக் அபு மற்றும் ஜியோ பேபி உள்ளிட்ட பலர் டாக்டர் அம்பேத்கர் இயற்றிய அரசியல் சாசனத்தின் முகவுரையை தங்களது சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள்.






இவர்களைத் தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன்  மதம் குறித்து டாக்டர் அம்பேத்கர் பேசிய வாசகம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு குடியரசு தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார். “மதம் எப்போது ஒரு விதிமுறையாக மாறுகிறதோ அப்போது அது தோற்றுப்போகிறது” என்று அம்பேத்கரின் வாசகத்தைப்  பகிர்ந்த அவர் ‘ இந்திய அரசியல் சாசனத்தைக் கொண்டாடுவது இந்திய அரசியலமைப்பின் தந்தையைக் கொண்டாடுவதாகும். அதிகாரத்துக்கு பதிலாக தனிமனித சுதந்திரத்தை , வெறித்தனமான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நம் தேசத்திற்கு சமத்துவத்தை கற்பித்தவர், நான் எப்போது பார்த்து வியந்துபோகும் சமரசமற்ற நேர்மை கொண்ட ஒரு அரசியல் தலைவர், ” என்று பதிவிட்டிருந்தார்.


பதிவை நீக்கியது ஏன்?


இந்த பதிவை வெளியிட்ட சில நிமிடங்களில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மாளவிகா மோகனன் நீக்கியுள்ளது தற்போது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் தங்கலான் படம் வெளியாக இருக்கும் நிலையில் விமர்சன ரீதியான பதிவுகளை அவர் தவிர்க்க நினைத்த காரணத்தினால் இந்த பதிவை அவர் நீக்கியிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டுவருகிறது.