பிரபல நடிகை மாளவிகா மோகனன், மேத்யூ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாக உள்ள படம் க்ரிஸ்டி. வயது கடந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாக உள்ளது.


இந்தப் படத்தின் வெளியீட்டுப் பணிகளில் ஒருபுறம் மாளவிகா பிசியாக உள்ள நிலையில், மற்றொரு புறம் பா.ரஞ்சித்தின் தங்கலான் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.


சீயான் விக்ரமுடன் முதன்முதலாக பா.ரஞ்சித் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், ஏற்கெனவே இப்படத்துக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.  மேலும் இந்தப் படத்தில் பார்வதி, பசுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில், ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.


இந்நிலையில், முன்னதாக க்ரிஸ்டி படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மாளவிகா தங்கலான் பட அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.


“க்ரிஸ்டி படத்தில் இருந்து தங்கலான் படத்துக்குச் சென்று அனைத்து நேர் எதிரான விஷயங்களை செய்ய வேண்டியிருந்தது. நான் மேலும் தைரியசாலியாகவும் உறுதியாகவும் கோபக்காரியாகவும் போர் வீராங்கனையாகவும் செயல்பட வேண்டி இருந்தது.


ரஞ்சித் சார் மிகவும் உறுதியான நபர். அவர் தனக்கு வேண்டியதைப் பெறும் வரை உங்களை விட மாட்டார். அது மிகவும் சிறப்பான விஷயம், நான் அதை ரசிக்கிறேன்.


தங்கலான் விக்ரம் சாரின் படம். அவர் மிகப்பெரும் நடிகர். ஆனால் அப்படத்தில் எனக்கும் மிகச்சிறந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. மேலும் தங்கலான் படம் பா.ரஞ்சித் போன்ற சிறப்பான இயக்குநரைக் கொண்டுள்ளது.


20 ஆண்டுகளுக்குப் பிறகு நான் திரும்பிப் பார்த்தால் இந்த படம் செய்ததற்கு நிச்சயம் வருந்த மாட்டேன். அவ்வளவு சிறப்பான கதாபாத்திரம் அது” எனத் தெரிவித்துள்ளார்.


 






இதேபோல் முன்னதாக தங்கலான் படத்துக்காக சிலம்பப் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை மாளவிகா தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.


விக்ரமின் 61ஆவது படமான இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் நிலையில், 18 ஆம் நூற்றாண்டில் கோலார் தங்கச் சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ் மற்றும் ஹிந்தியில் உருவாகி வரும் தங்கலான் படம் பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. பான் - இந்திய திரைப்படமாக உருவாகி வரும் இந்தப்படம்  2டி மற்றும் 3டியில் வெளியாகும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் திரையரங்குகளில் ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: Lata Mangeshkar : நீங்காத ரீங்காரம் நீதானே.. லதா மங்கேஷ்கர் முதலாம் ஆண்டு நினைவு தினம்.. உங்க மனசுக்கு உடனே தோணும் பாட்டு எது?