மாளவிகா அவினாஷ்
மாதவன் நடித்த ஜே ஜே படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா அவினாஷ். தஞ்சாவூரில் பிறந்த இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். கன்னட சீரியல் மூலமாக நடிகர் அவினாஷ் உடன் இணைந்து நடித்த நிலையில் 2001 ஆம் ஆண்டு கன்னட நடிகர் அவினாஷை திருமணம் செய்து கொண்டார்.
அவினேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். திருமலை, சந்திரமுகி, பரமசிவன், வட்டாரம், சிறுத்தை, வீரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2001 ஆம் ஆண்டு மாளவிகா மற்றும் அவினாஷ் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு காலவ் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் தான் மகனை நினைத்து கடந்த 15 ஆண்டுகளாக இரவு பகலாக தூங்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாக மாளவிகா அவினாஷ் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அம்மா டான்ஸர். அவருக்கு டான்ஸ் என்றால் ரொம்பவே பிடிக்கும். அதனால் எனக்கும் அது மேல ஆர்வம் வந்துச்சு. நானும், பாட்டும் டான்ஸும் கற்றுக் கொண்டேன். எந்தவித சினிமா பின்னணியும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்தவள். குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்தேன். அதே போலத்தான் தொலைக்காட்சி தொடர்களிலும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
15 வயது வித்தியாசம்:
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவினாஷை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு எங்களுக்கு ஒரு அண்டர்ஸ்டாண்டிங் இருந்தது. அதனால் திருமணம் செய்து கொண்டோம். ஆனால், இருவருக்கும் இடையில் 15 வருடம் வயது வித்தியாசம். திருமணத்திற்கு பிறகு எங்களுக்கு காலவ் பிறந்தான். அவன் ரொம்பவே அழகு. ஆனால், பேச முடியவில்லை. அதை கேட்கும் போதே எங்களுக்கு இதயமே நொறுங்கிவிட்டது. எல்லோருமே எங்களுக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. அங்க போங்க இங்க போங்கன்னு ஒவ்வொரு டாக்டர் பத்தி சொல்லி அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. எனினும் மகனுக்காக நாங்கள் போகாத டாக்டரே இல்லை. எல்லா டாகர்கிட்டயும் கூட்டிட்டு போயிட்டோம். ஆனால் பலன் கிடைக்கவில்லை.
மகனுக்கு உள்ள குறைபாடு
நான் மாசமாக இருக்கும் போது குழந்தையின் நோய் பற்றி தெரிந்து கொள்ள வசதி இருந்திருந்தால் அதைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், அப்படியெல்லாம் தெரிந்து கொள்ள வசதி இல்லையே. ஒரு அம்மாவின் ஆசை என்னவாக இருக்கும், தன்னுடைய மகன் தன்னை ஆசை தீர வாயால் அம்மா என்று கூப்பிட வேண்டும் என்பது தானே. ஆனால் என்னுடைய மகனால் அப்படியெல்லாம் கூப்பிடவே முடியாது.
மகனுக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமலேயே 15 வருடங்கள் கடந்துவிட்டது. அவன் உயிரோடு இருப்பானா என்ற ஏக்கத்திலேயே வருடங்களை கடந்து விட்டோம். இத்தனை வருடங்களில் நாங்கள் எங்களுடைய தூக்கத்தை இழந்துவிட்டோம். டாக்டர்கிட்ட மட்டுமில்ல போகாத கோயிலில்ல. எத்தன சாமிய கும்பிட்டிருப்போம். ஆனால், ஒரு சாமி கூட கண் திறந்து பார்க்கல. எங்களால் இந்த உலகத்திற்கு வந்த உயிர். அவன் படும் கஷ்டத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று வலியுடனும், வேதனையுடனும் கூறியுள்ளார்.
இரவில் தூங்கி 15 வருடம் ஆகிறது:
மேலும் தங்களுடைய மகனுக்கு 'Wolf His Chhorn syndrome' என்கிற அரிய பாதிப்பு உள்ளது. இது உலகத்திலேயே 2000 பேருக்கு மட்டும் தான் உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அவன் பிறந்ததுமே நீங்கள் Unlucky என கூறினார்கள். இரவு முழுவதும் நாங்கள் கவலையால் தூங்காம இல்ல. அவனும் இரவு முழுக்க தூங்க மாட்டான் எங்களையும் தூங்க விடமாட்டான். அழுது கொண்டே இருந்தால் எப்படி தூக்கம் வரும்? என மாளவிகா மன வேதனையோடு கூறியுள்ளார்.