எம்ஜிஆர் எனக்கு வைர மோதிரம் ஒன்றை பிறந்தநாள் பரிசாகக் கொடுத்தார் என்று நடிகை லதா கூறியுள்ளார். எம்ஜிஆர் காலத்து பிரபல நடிகை லதா. இவர் சிவாஜி கணேஷன், ரஜினிகாந்த், கமல்ஹாசனுடனும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அண்மையில் இவர் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்தார் அதில் அவர் பல சுவாரஸ்யத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


நடிகை லதா பேட்டியிலிருந்து:


நான் எம்ஜிஆர் படங்களில் அதிகம் நடித்திருக்கிறேன். அதனாலேயே எனக்கு எம்ஜிஆர் லதா என்ற பட்டமே வந்துவிட்டது. அதை நான் இறைவனின் அருளாகக் கருதுகிறேன். ஒருமுறை படப்பிடிப்பில் எனது பிறந்தநாளைத் தெரிந்து கொண்ட எம்ஜிஆர் உனக்கு இன்னிக்கு இன்று பிறந்தநாளாமே என்ன வேண்டும் என்று கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. உடனே மோதிரம் வேண்டுமென்றேன். மதியம் எனக்கு மோதிரம் கொடுத்தார். அது வைர மோதிரம். அந்த மோதிரத்தை நான் இன்னும் பத்திரமாக வைத்துள்ளேன். அதுபோல் தேர்தல் நேரத்தில் எனக்கு அவர் ஒரு நடராஜர் சிலை பரிசாகக் கொடுத்தார் அதையும் பத்திரமாக வைத்துள்ளேன்.


எனக்கு சமையலே தெரியாமல் இருந்தது. என் திருமணத்திற்குப் பின் சிங்கப்பூரில் தான் நான் சமையல் கற்றுக் கொண்டேன். என் சமையில் ஸ்பெஷல் ஆட்டுக்கால் பாயா தான். என் கணவருக்கும் அதுதான் இப்போதுவரை ஃபேவரைட். எனக்கு வட இந்திய நண்பர்கள் உண்டு. அவர்களும் எனது பாயாவுக்கு அடிமை.




சீரியல் ஒன்றும் சளைத்தது இல்லை:


நான் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தேன். ஆனால் இப்போது சீரியலில் நடிக்கிறேன். நான் சினிமாவில் நடித்த காலத்தில் ஆண்டுக்கு 50 படங்கள் வரும். அதில் 40 நன்றாக ஓடிவிடும். 10 தான் அடி வாங்கும். இப்போது வருஷத்துக்கு 450 படங்கள் வருகின்றன. இவற்றில் 50 படங்கள் ஹிட் ஆனாலே பெரிய விஷயமாக இருக்கிறது. ஆனால் சீரியலுக்கு நல்ல ரீச் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்றுவிடுகிறது. நான் அந்தக்காலத்தில் சினிமா நடிகையாக பெற்ற பெருமையை இப்போது சீரியல் நடிகையாகவும் பெறுகிறேன். என்னை சின்னஞ்சிறு பிள்ளைகள் கூட அபியும் நானும் சீரியல் பாட்டி என்று அடையாளம் கண்டு கொள்கின்றனர். 


என் அழகின் ரகசியம் இதுதான்..


இப்பவும் என்னை செட்டில் நிறைய பேர் இந்த வயதிலும் எப்படி அழகை மெயின்டெய்ன் செய்கிறீர்கள் எனக் கேட்கின்றனர். நான் மெடிடேஷன் செய்வேன். யோகா செய்வேன். அப்புறம் எதை சாப்பிட்டாலும் அளவாக சாப்பிடுவேன். எல்லாவற்றிற்கும் மேலாக இறையருள் இருக்கிறது என நினைக்கிறேன். அதுதான் என் அழகின் ரகசியம் என்பேன்.


என் தந்தை ராமநாதபுரம் ராஜா வம்சத்தைச் சேர்ந்தவர். அவர் பெயர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி. என் தாயார் பெயர் லீலாராணி. என் சொந்தப் பெயர் நளின். நான் சென்னையில் ஹோலி ஏஞ்சல்ஸில் தான் படித்தேன். நான் நடிக்க வருவேன் என்று நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆனால் நடிக்க வந்துவிட்டேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.