நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தன்னை ஒரு சாதி வெறியன் என குறிப்பிட்ட நபர்கள் தெரிவிப்பதாக ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


கேரளாவைச் சேர்ந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சக்கரமுத்து என்ற படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானார். தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான கரு.பழனியப்பனின்  “பிரிவோம் சந்திப்போம்” படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானார்.


தொடர்ந்து பொய் சொல்லப் போறோம், எல்லாம் அவன் செயல், யுத்தம் செய், திருதிரு துறுதுறு, ஈரம், நாடோடிகள், நான் மகான் அல்ல, வேட்டைக்காரன், ராவணன், பாஸ் என்கிற பாஸ்கரன், 180, ரௌத்திரம், உச்சிதனை முகர்ந்தால் என படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து கவனம் பெற்றார். இதில் யுத்தம் செய் படத்திற்காக மொட்டையடித்து நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். 


இதனையடுத்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சொல்வதெல்லாம் உண்மை” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு பட்டித்தொட்டியெங்கும் ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. இதற்கிடையில் இயக்குநராக களம் கண்ட அவர், ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஆர் யூ ஓகே பேபி என்ற படத்தை இயக்கி வருகிறார். 


கடந்தாண்டு நடந்த 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான ஆண்டுகளில் வெளியான திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரைகளுக்கும் அதன் கலைஞர்களுக்கும் விருது வழங்கும் விழா நடந்தது. இதில் 2011 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியலில் உச்சிதனை முகர்ந்தால் படத்தில் நடித்ததற்காக சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருது பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது பெயர் விருதுக்கான பட்டியலை அறிவிக்கும் போது இடம் பெறவில்லை. இதனால் அதிருப்தியடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன், அங்கிருந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேள்வியெழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


மேலும் சமீபத்தில் பாஜகவில் இருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் விலகியதாக தகவல் வெளியானது. ஆனால் தான் அக்கட்சியில் இல்லை என அவர் விளக்கம் கொடுத்திருந்தார். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் சமூகம் சார்ந்த பல பதிவுகளை இடுவார். இது சில நேரம் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தும். 


இந்நிலையில் இன்றைய தினம் லட்சுமி ராமகிருஷ்ணன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ஊடகவியலாளர் ஒருவர், “இந்தியா முழுவதும் ஊடகத்துறையில் இருக்கின்ற 85% பேர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். நீங்கள் இயக்குநர், நடிகை, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட நீங்கள் ஏன் ஊடகத்துறைக்கு வருகிறீர்கள் என கேள்வியெழுப்பினார். எல்லா இடத்துலேயும் ஏன் வர்றீங்க. இன்னொருத்தர் வாய்ப்பை ஏன் பறிக்கிறீங்க?” என கேட்கிறார். 


அதற்கு, “ தான் அதைப்பற்றி யோசிக்கவில்லை” என லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்கிறார். உடனே ஊடகவியலாளர், ”ஏதாவது ஒரு துறையில் இருக்கலாமே, ஏன் எல்லா துறையிலேயும் வர்றீங்க” என மீண்டும் கேட்க, நீங்க எப்படி நான் என்ன பண்ண வேண்டுமென முடிவு செய்கிறீர்கள். இதுதான் முட்டாள்தனமான எண்ணம் என லட்சுமி ராமகிருஷ்ணன் கோபமாக தெரிவிக்கிறார்.   


இந்த வீடியோவை பதிவிட்டு அதில், இது சரியான அணுகுமுறையா? கரிகாலன் என்ற இளைஞன் , நான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால், ஊடகங்களில் இருந்து வெளியேறும்படி என்னைக் கேட்டுக் கொண்டார்.  மேலும் இந்த மக்கள் நான் ஒரு சாதிவெறியன் என்கிறார்கள் என தெரிவித்திருந்தார்.