புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி இன்று உயிரிழந்தது. இதையடுத்து அந்த யானையின் இறுதிச் சடங்கு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் அரசியல் தலைவர்கள் உட்பட ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். யானையின் உடல் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. யானையின் இறப்பு குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்குப்பின் தெரியவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகை 70, 80 களில் சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் நடித்து பிரபலமான நடிகை லட்சுமி இறந்து விட்டதாக செய்திகள் பரவின. இதை கேள்விபட்ட நடிகை லட்சுமி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், இன்று காலையில் இருந்து எனக்கு அனைவரும் போன் செய்து கொண்டு இருக்கிறார்கள். எனக்கு பிறந்த நாள் கூட கிடையாது பின்னர் ஏன் தன்னை இத்தனை பேர் கூப்பிடுகிறார்கள் என்று விசாரித்தால் நான் இறந்து போய்விட்டதாக ஒரு செய்தி போய் கொண்டிருப்பதாக கேள்வி பட்டேன்.
பிறந்தால் இறந்துதானே போக வேண்டும். இதுக்கெல்லாம் பயப்ப்பட போறதும் இல்லை. கவலைப்பட போறதும் இல்லை. ஆனால் இவ்வளவு வேலை வெட்டி இல்லாதவங்க, இதை பரப்பிட்டு இருக்காங்களேன்னு நினைக்கும் போது, நாம் திருந்தவே மாட்டோமா என்று தோன்றுகிறது.
இந்த செய்தியை கேள்விபட்டதும் பல பேர் கவலைப்பட்டு அக்கறையாக விசாரித்தது எனக்கு மிகவும் சந்தோஷத்தை அளித்தது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். எனக்கு ஒரு கவலையும் இல்லை. கிறிஸ்துமஸ் மற்றும் புது வருடத்திற்காக ஷாப்பிங் வந்திருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். எல்லோருக்கு என்னுடைய வாழ்த்துகள்.” என்று அதில் பேசி இருக்கிறார்.