நடிகை குஷ்பு தன் சொந்த தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ் சினிமாவில் எந்த நடிகையும் கொண்டாடப்படாத வகையில், கோயில் கட்டி ரசிகர்களால் தலையில் வைத்து கொண்டாடப்பட்ட நடிகை குஷ்பு. தமிழ் தொடங்கி தெலுங்கு, இந்தி என அந்தந்த மொழி முன்னணி நடிகர்களுடன் வெள்ளித்திரையில் இணைந்து ஜொலித்த குஷ்புவை, கோலிவுட் சினிமா ரசிகர்கள் 80கள், 90களில் கொண்டாடித் தீர்த்தனர்.




இந்தியில் குழந்தை நட்சத்திரமாக தன் 10 வயதில் அறிமுகமான குஷ்பு, தன் 18 வயதில் கோலிவுட்டில் தர்மத்தின் தலைவன் படம் மூலம் ரஜினி, பிரபுவுடன் அறிமுகமானார். அதன் பின் பிரபல நடிகையாக உருவெடுத்து கோலோச்சிய குஷ்பு 2000ஆம் ஆண்டு நடிகர் சுந்தர்.சியை திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டு மருமகளாக செட்டில் ஆகினார்.


அதன் பின் அரசியல் களத்திலும் குதித்த குஷ்பு, திமுக, காங்கிரஸ் எனப் பயணித்து தற்போது பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருந்து வரும் நிலையில், சென்ற வாரம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும்  நியமிக்கப்பட்டார். இதனையடுத்து குஷ்புவுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துகளைப் பெற்று வரும் நிலையில், முன்னதாக மூத்த பத்திரிகையாளரான பர்கா தத் உடனான தன் உரையாடலின்போது தன் சொந்த தந்தையாலேயே தான் பாலியல் வன்முறையை சந்தித்தேன் எனும் அதிர்ச்சிகர தகவலை குஷ்பு பகிர்ந்துள்ளார்.


தன்னை 8 வயது முதல் தன் தந்தை பாலியல்ரீதியாக துன்புறுத்தத் தொடங்கியதாகவும், மனைவி, குழந்தைகளை அடிப்பதை தன் உரிமையாக தன் தந்தை கருதியதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.


”ஆணோ, பெண்ணோ ஒரு குழந்தை துன்புறுத்தப்படுகையில் அது வாழ்க்கை முழுவதற்குமான வடுவைத் தந்துவிடுகிறது.  என் அம்மா மிகவும் மோசமான திருமண வாழ்வை வாழ்ந்துள்ளார். என் தந்தை தனது மனைவியை அடிப்பது தனது உரிமை என்று நினைத்தவர். அவரது குழந்தைகளை அடித்து, அவரது ஒரே மகளான என்னை பாலியல்ரீதியாக துன்புறுத்தினார். பாலியல் துன்புறுத்தல்களை நான் என் 8 வயதில் எதிர்கொள்ளத் தொடங்கினேன். 15 வயதில் தன் அவருக்கு எதிராக பேசும் தைரியம் எனக்கு வந்தது.


”எதுவாக இருந்தாலும் கணவனைக் கடவுளுக்கு நிகராகக் கருதும் நிலையில் என் அம்மா இருந்தார். எனவே நான் இதைச் சொன்னால் என் அம்மா நம்பமாட்டார்களோ என்று பயந்தேன். ஆனால் என் 15 வயதில் பொறுத்தது போதும் என்று உணர்ந்து அவரை எதிர்க்கத் தொடங்கினேன்.  எனக்கு 16 வயது கூட ஆகவில்லை. எங்களை என் தந்தை அப்படியே விட்டு விட்டுச் சென்றுவிட்டார். அடுத்தவேளை உணவுகூட கிடைக்காமல் தவித்தோம்” என குஷ்பு பகிர்ந்துள்ளார். தன் சொந்த தந்தையாலேயே பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக குஷ்பு பகிர்ந்துள்ள இந்தத் தகவல் திரையிலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.