ராஜராஜ சோழன் பற்றி கருத்து சொன்ன இயக்குநர் வெற்றிமாறனை நடிகை குஷ்பூ கடுமையாக சாடியுள்ளார். 


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்தநாளை அவரது கட்சியினர் மணிவிழாவாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், சினிமாவை திராவிட இயக்கங்கள் கைப்பற்றியது விளைவு தான் தமிழ்நாடு இன்றளவும் இன்னும் மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற காரணிகள் ஊடுருவ முடியாத பக்குவத்தோடு இருப்பதாக நான் நினைக்கிறேன். சினிமாவை அரசியல் மயமாக்குவது மிக முக்கியம். நடுவில் சில காலம் அது எடுக்கப்படாமல் இருந்தது.






சினிமா என்னும் கலையை சரியாக நாம கையாளணும். அப்படி கையாள தவறும்போது தான்  நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டு வருகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது,ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவித்தார். அவரின் இந்த ராஜராஜ சோழன் பற்றிய கருத்து கடும் சர்ச்சைக்குள்ளானது. 






வெற்றிமாறன் கருத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு கருத்துகளை சமூக வலைத்தளம் மூலம் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகையும், பாஜக செய்தி தொடர்பாளருமான குஷ்பூவிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதையே பார்க்க வேண்டும். எல்லாத்துலேயும் தப்பு கண்டுபிடிக்கணும், என்னோட நோக்கத்துல மட்டும் தான் பார்ப்பேன்னு அவர் சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது என கடுமையாக கூறியுள்ளார். 


முன்னதாக பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு வந்த அவர் வரலாறு பற்றிய ஆய்வு தெரியாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்கமாட்டார்  என்றும், படம் சூப்பர் டூப்பர் ஹிட், முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.