காலில் அடிபட்டு இருந்த தனக்கு சக்கர நாற்காலி வழங்காத ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு கண்டனம் தன் ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு பதிவிட்டுள்ளார்.
இரண்டு நாள்களுக்கு வெளியூர் பயணத்துக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது காலில் அடிபட்ட நிலையில், புகைப்படத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் அது குறித்து நடிகை குஷ்பு பகிர்ந்திருந்தார்.
தொடர்ந்து நேற்று அவர் வெளியூருக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், காலில் அடிபட்டு இருந்த தனக்கு சக்கர நாற்காலி வழங்காத ஏர் இந்தியா விமான நிறுவனத்தை கண்டித்து குஷ்பு மேலும் ஒரு பதிவிட்டுள்ளார்.
”முழங்காலில் காயம் உள்ள பயணிகளை அழைத்துச் செல்ல உங்களிடம் அடிப்படை சக்கர நாற்காலி கூடவா இல்லை. என் தசைநார் கிழிந்து அடிபட்ட நிலையில், சென்னை விமான நிலையத்தில் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
பின்னர் வேறொரு விமான நிறுவனத்திடம் இருந்து சக்கர நாற்காலியைப் பெற்று வந்து என்னை அழைத்துச் சென்றனர். உங்களால் சிறப்பாகச் செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்” எனக் காட்டமாக பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், குஷ்புவிடம் முன்னதாக மன்னிப்புக் கோரிய ஏர் இந்தியா விமான நிறுவனம், ”நீங்கள் எதிர்கொண்ட இந்த அனுபவத்துக்காக வருந்துகிறோம், எங்கள் சென்னை விமான நிலைய குழுவின் கவனத்தை இவ்விவகாரத்தை உடனடியாகக் கொண்டு செய்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதேபோல் தன்னிடமும் தன் பெற்றோரிடம் ஆங்கிலத்தில் பேசாமல் இந்தியில் பேசி கடுமையாக நடந்துகொண்ட விமான நிலைய அலுவலர்களைக் கண்டித்து நடிகர் சித்தார்த் பகிர்ந்த பதிவு இணையத்தில் வைரலானது.
இது குறித்து தன் இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்த சித்தார்த், "சிஆர்பிஎஃப் அலுவலர்களால் மதுரை விமான நிலையத்தில் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்கு ஆளானோம். எனது வயதான பெற்றோரிடம் பைகளில் இருந்து நாணயங்களை எடுக்குமாறு கோரினார். மேலும் ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டும் தொடர்ந்து எங்களிடம் இந்தியிலேயே பேசினார்கள்.
இது மிகவும் மோசமான செயல். நாங்கள் எதிர்த்து கேட்டபோது இந்தியாவில் இது இப்படிதான் இருக்கும் எனப் பேசினார்கள். வேலையில்லாதவர்கள் தங்கள் அதிகாரத்தை இப்படியெல்லாம் காண்பிக்கிறார்கள்” எனப் பதிவிட்டிருந்தார். சித்தார்த்தின் இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது குறிப்பிடத்தக்கது.