பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தனது யோகா பயிற்றுனர் பயிற்சி அளிப்பதை கலாய்த்து தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது. இந்த லாக்டவுன் காலத்தில் பல யோகா வீடியோக்களை தனது இன்ஸ்டாக்ராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார் கீர்த்தி சுரேஷ். அதற்கு ஏற்றார் போல அவர் முகம் மற்றும் உடலில் மாற்றங்கள் தெரிவதை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்நிலையில் தனக்கு ஆன்லைன் மூலம் தினமும் யோகா பயிற்சி அளிக்கும் தனது ஆசிரியரை, அவர் யோகா கற்றுத்தரும் முறையை போல நடித்து, அவரை கலாய்த்து வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
அவருடைய யோகா ஆசிரியர் தாராவும், கீர்த்தி தான் தினமும் பயிற்சி அளித்துவிட்டு இறுதியாக அனைவருக்கும் பை சொல்லும் விதத்தை அப்படியே நடித்துக்காட்டியுள்ளார் கீர்த்தி.
கீர்த்தி சுரேஷ், பிரபல நடிகை மேனகா சுரேஷின் மகள் என்பது பலரும் அறிந்ததே. கீர்த்தியின் தந்தையும் ஒரு தயாரிப்பாளர். சினிமா குடும்பத்தில் பிறந்த கீர்த்திக்கும் சிறு வயது முதலே நடிப்பில் ஆர்வம் இருந்த நிலையில் 2000மாவது ஆண்டு தனது 8வது வயதில் Pilots என்ற மலையாள திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு மூன்று திரைப்படங்களில் அவர் குழந்தை நட்சத்திரமாக தோன்றியுள்ளார்
அதன் பிறகு மலையாளத்தில் அவர் சில சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சில ஆண்டுகள் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்த கீர்த்தி, 2014ம் ஆண்டு பிரபல நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான கீதாஞ்சலி என்ற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் ஏ.எல். விஜயின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான இது என்ன மாயம் திரைப்படத்தில் பிரபல நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக களமிறங்கினார் கீர்த்தி. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரெமோ திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. 2017ம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படம் கீர்த்தியின் சினிமா அந்தஸ்தை உயர்த்தியது.
கடந்த 2018ம் ஆண்டு நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழக்கையை அடுத்தகட்டத்துக்கு எடுத்து சென்றது. அந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இறுதியாக கீர்த்தி சுரேஷ் தமிழில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் வெளியான பென்குயின் படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்தே மற்றும் சாணி காகிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.