மலையாள சினிமாவில் தன் திரைப்பயணத்தைத் தொடங்கி தமிழ், தெலுங்கு, தற்போது இந்தி என பான் இந்திய அளவில் கோலோச்சி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). தயாரிப்பாளர் ஜி. சுரேஷ் குமார் - 80களின் பிரபல நடிகை மேனகா இந்தத் தம்பதியின் மகளான கீர்த்தி, குழந்தை நட்சத்திரமாக தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார்.


இந்நிலையில், நடிகையாக பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன் லால் உடன் ‘கீதாஞ்சலி’ படத்தில் தன் இன்னிங்ஸைத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் 2015ஆம் ஆண்டு ‘இது என்ன மாயம்’ படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக அறிமுகமான கீர்த்தி, சிவகார்த்திகேயன் உடன் நடித்த ‘ரஜினிமுருகன்’ படம் மூலம் கோலிவுட் ரசிகர்களின் இதயங்களை வென்று கனவு தேவதையாக மாறினார்.


தெலுங்கிலும் அதிரடி எண்ட்ரி தந்த கீர்த்தி நடிகை சாவித்ரியின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட நடிகையர் திலகம் (மகாநடி) படம் மூலம் பாராட்டுகளைக் குவித்ததுடன் தேசிய விருதையும் வென்றார். தற்போது பாலிவுட் சினிமாவில் விரைவில் கீர்த்தி காலடி எடுத்து வைக்க உள்ளார். இந்நிலையில் கீர்த்தி திரைத்துறைக்கு வந்து 10 ஆண்டுகள் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடியும் கீர்த்திக்கு வாழ்த்து மழை பொழிந்தும் மகிழ்ந்தனர்.


இந்நிலையில், தன் 10 ஆண்டுகால திரைப் பயணம் குறித்து கீர்த்தி உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


‘நீங்க இல்லாம நான் இல்ல’


“இது ஒரு சின்ன நன்றி தெரிவிக்கும் வீடியோ, ஏன்னா இன்னைக்கு ரொம்ப ஸ்பெஷல். இன்னையோட நான் நடிக்க வந்து 10 வருஷம் ஆகுது.  அப்பா - அம்மா.. நீங்க இல்லாம நான் இல்ல.. உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறதுனே தெரியல. என் குரு பிரியன் அங்கிள். ரொம்ப நன்றி.  கடவுள் எப்பவும் என்கிட்ட அன்பா இருக்காரு. சினிமா துறையினர், சக நடிகர்கள், மீடியா எல்லாருக்கும் நன்றி. கடைசியா நீங்க.. என் ஃபேன்ஸ்.. நீங்க இல்லாம நாம இல்ல..ரொம்ப நன்றி. என் ஏற்ற இறக்கம், சுக துக்கம் எல்லாத்துலயும் நீங்க என்கூட இருந்து இருக்கீங்க.


ட்ரோலர்ஸூக்கும் நன்றி


நான் என் நடிப்பால இன்னும் அதிகமாக உங்களை மகிழ்விப்பேன்னு ப்ராமிஸ் பண்றேன். 10 வருஷம் ஆகியிருக்கு ஆனாலும் இது தொடக்கம் தான்.. எனக்கு இன்னும் நீண்ட பாதை இருக்கு. அதுக்கு நீங்க எல்லாரும் தான் எனக்கு சப்போர்ட் பண்ணனும். இத்தன நாள் இவ்வளவு அன்பா இருந்து இருக்கீங்க. இன்னும் நிறைய அன்ப கொடுங்க. ரொம்ப நன்றி. 


ட்ரோலர்ஸ்... எனக்கு தெரியுது. எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்காது தான். ஆனாலும், நீங்களும் நான் இந்த இடத்துக்கு வர காரணமா இருந்து இருக்கீங்க. நான் அத மதிக்கிறேன். உங்களுக்கும் நன்றி. எனக்கு  பேச வார்த்தைகள் கிடைக்கல.. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்" எனப் பேசியுள்ளார்.


 






கீர்த்தி சுரேஷின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.