தான் இருக்கும் பகுதியில் உள்ள வெள்ளநீரை வெளியேற்ற யாரும் வரவில்லை என எக்ஸ் வலைத்தளத்தில் நடிகை கீர்த்தி பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். 


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல்  சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் தனது தாக்குதலை தொடுத்து விட்டு சென்றது. இதில் சூறைக்காற்றுடன் கிட்டதட்ட 24 மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்ததால் நகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த வெள்ளநீருக்கு பிரபலங்களும் தப்பவில்லை. தனது வீட்டுக்குள் தண்ணீர் புகுந்ததாக நடிகர் விஷால் சென்னை மாநகராட்சியை விமர்சித்து வீடியோ வெளியிட்டது பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 


இதனிடையே வெள்ள நீரில் சிக்கிய நடிகர்கள் ஆமீர்கான், விஷ்ணு விஷால் ஆகியோரை மீட்பு படையினர் படகில் சென்று மீட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் இளம் நடிகையும், நடிகர் அசோக் செல்வனின் மனைவியுமான கீர்த்தி பாண்டியன் தான் இருக்கும் பகுதியில் உள்ள வெள்ளநீரை வெளியேற்ற யாரும் வரவில்லை  குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 


அதில், “இது மயிலாப்பூர், ராதாகிருஷ்ணன் சாலைக்கு அருகில் உள்ள விவேகானந்தா கல்லூரி. இங்குள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியை செய்ய யாரும் வரவில்லை. நேற்று (டிசம்பர் 3) முதல் இப்படித்தான் இருக்கிறது. நிமிடத்துக்கு நிமிடம் அதிகளவு சாக்கடை நீர் வெளியேறி மழைநீருடன் கலக்கிறது. மேலும் இங்கு தரை தளத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதற்கும் மயிலாப்பூரின் மற்ற பகுதிகளுக்கும் ஏதாவது செய்யுங்கள்.






கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தில் கூட இங்கு தண்ணீர் தேங்கவில்லை. ஆண்டு முழுவதும், மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளைத் தோண்டிக்கொண்டே இருந்தனர். மேலும் பல முறை சாலைகள் பள்ளம் விழுந்து பின்னர் அவை சரி செய்யப்பட்டது. தற்போது எல்லாம் தலைகீழாக மாறி தண்ணீர் முற்றிலும் தேங்கியுள்ளது. இங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் உள்ளவர்கள் அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகளை பெற வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. தண்ணீர் கூட அருந்த முடிவதில்லை. தற்போது 48 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் இல்லை. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நாங்கள் அபார்ட்மெண்டிலிருந்து வெளியே வரும் வரை அல்லது மொட்டை மாடியில் ஏதோ ஒரு மூலைக்கு செல்லும் வரை நெட்வொர்க் கிடைக்கவில்லை” என பதிவிட்டுள்ளார்.