பட ரிலீஸில் போட்டி குறித்து கேள்வி எழுப்பிய நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதனிடம் நடிகை கீர்த்தி பாண்டியன் பதிலடி கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


யஹ்வந்த் கிஷோர் இயக்கியுள்ள படம் ‘கண்ணகி’. அம்மு அபிராமி, கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஹாலினி, மயில்சாமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ராம்ஜீ ஒளிப்பதிவும்,  சரத்குமார் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளார். கார்த்திக் நேத்தா இப்படத்திற்கு பாடல் வரிகள் எழுதியுள்ள நிலையில் ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


ஸ்கை மூன் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள கண்ணகி படமானது நாளை (டிசம்பர் 15) திரையரங்கத்தில் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் ட்ரெய்லர் வரை கவர்ந்த நிலையில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். இப்படியான நிலையில் சில தினங்களுக்கு இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. 


அதில் நடிகரும், பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதாவது டிசம்பர் 15 ஆம் தேதி கண்ணகி படம் மட்டுமல்லாமல், கீர்த்தி பாண்டியனின் கணவரும், நடிகருமான அசோக் செல்வனின் ‘சபா நாயகன்’ படமும் ரிலீசாகிறது. இதனால் திருமணத்திற்கு பிறகு கணவன் - மனைவி படம் நேருக்கு நேர் மோதுவது திரையுலகில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன், “வீட்டில் தான் சண்டை போடுறீங்கன்னு பார்த்தா பட ரிலீஸிலும் சண்டை போடுவீங்களா?’ என கேள்வி எழுப்பினார். 


இதனால் கடுப்பான கீர்த்தி பாண்டியன், ‘நாங்க சண்டை போடுறோம்ன்னு எங்க வீட்டுல வந்து பார்த்தீங்களா?’ என பதிலடி கொடுக்க, சரி போட்டின்னு வச்சிக்கலாம் என பயில்வான் ரங்கநாதன் பின் வாங்கினார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் இப்படி கேள்வி கேட்பவர்களுக்கு சட்டென பதிலடி கொடுத்தால் தான் சரிபட்டு வருவார்கள் என கமெண்டுகள் பதிவிட்டு வருகின்றனர், 


அசோக் செல்வன் வழியில் கீர்த்தி பாண்டியன் பதில்


தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வரும் அசோக் செல்வனிற்கும், நடிகர் அருண் பாண்டியனின் மகளும், நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் கடந்த செப்டம்பர் 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமண புகைப்படங்கள் வெளியான நிலையில் கீர்த்தி பாண்டியன் கடுமையாக உருவகேலி செய்யப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘இந்த உலகத்தில் மிகவும் அழகான பெண் கீர்த்தி தான்” என புகைப்படம் ஒன்றை பதிவிட்டு விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். தற்போது கீர்த்தியும் அதே வழியை தான் பின்பற்றி இருக்கிறார் என ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.