தமிழ், தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்த கவிதா நேர்காணல் ஒன்றில் தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் பேசியுள்ளது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1976 ஆம் ஆண்டு தெலுங்கு மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கவிதா. இவர் நடிகர் விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு மற்றும் அஜித்தின் முதல் படமான அமராவதியிலும் அவர்களுக்கு அம்மா கேரக்டரில் நடித்தார். அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர், சிவகுமார், கமல்ஹாசன், பிரபு, விஜயகாந்த் உள்ளிட்ட பலரின் படங்களிலும் கவிதா நடித்திருக்கிறார். அரசியலிலும் களம் கண்ட அவர் பாஜகவில் உள்ளார்.
இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில், தன் வாழ்க்கையில் மிகவும் மோசமான தருணம் பற்றி பேசியுள்ளார். அதில், “வாழ்க்கையில ரூ.80 கோடி, 90 கோடி சொத்துகள் கைவிட்டு போகும் போது கூட நான் பெரிதாக கவலைப்படவில்லை. நான் ரொம்ப ஸ்மார்ட் ஆக இருப்பேன். 17 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருநாள் நான் என்னுடைய கணவரை பார்க்க ஆபீஸூக்கு போயிருந்தேன். அப்போது பொருட்கள் சப்ளை செய்யும் ஒருவர், அவரை பார்த்து ரூ.1.35 லட்சம் பணத்துக்காக கெட்ட வார்த்தை பேசினான். நான் அதிர்ச்சியாகி அந்த நபரிடம், ‘நீங்க உங்க போன் நம்பரை கொடுங்க, அப்படி இல்லைன்னா நாளைக்கு வீட்டுக்கு வாங்க’ என சொன்னேன்.
ஆனால் அந்த நபர் மறுநாள் வருவதற்குள் என் கணவரிடம் கூட சொல்லாமல் தாலி செயினை விற்று விட்டேன். அடமானம் வைத்தால் மறுபடியும் திருப்ப வேண்டும், வட்டி கட்ட வேண்டும் என விற்று விட்டேன். அடுத்த நாள் காலையில் வீட்டுக்கு அந்த நபர் வந்தார். பணத்தை கொடுப்பதற்கு முன்னால், என் கணவரை அழைத்தேன். அந்த நபரிடம் கணவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே பணம் தருவேன். இல்லாவிட்டால் என்ன வேண்டுமானாலும் வெளியே போய் பண்ணிக்க. ஒரு காசும் கிடைக்காது என சொன்னேன். அந்த நபர் என்னவெல்லாமோ பேசினார். என் கணவரும் காலில் எல்லாம் விழ வேண்டாம் என சொன்னார். ஆனால் நான் கேட்கவே இல்லை. ஏன் அப்படி நடந்தேன் எனவும் தெரியவில்லை. கடைசியில் அந்த நபர் கணவர் காலில் விழுந்ததும் பணத்தை தூக்கி எறிந்தேன்.
நான் என் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளில் எதை அழிக்க வேண்டும் என நினைத்தால் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை தான் சொல்லுவேன். என் கணவர் மற்றும் மகன் கொரோனா காரணமாக இறந்து விட்டார்கள். என் வீட்டில் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் 2 பேர் ஏன் தப்பிக்க முடியவில்லை என தெரியவில்லை. ஒரே ஒரு நாள் இருவருக்கும் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. முதலில் என் மகனும், அடுத்ததாக கணவரும் இறந்து போனார்கள்” என கண் கலங்கியவாறு கவிதா பேசியுள்ளார்.