திரையரங்குகள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சமீபத்தில் அமல்படுத்தியது. அதனடிப்படையில் திரையரங்குகளுக்குச் செல்வோர் கொரோனா தடுப்பூசி சான்றிதழைக் காட்டிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.


இந்நிலையில் மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை... அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்” என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி கடிதமும் எழுதியிருந்தார்.


இச்சூழலில் நடிகை கஸ்தூரி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தியேட்டருக்குள் ரசிகர்களை அனுமதிக்க தடுப்பூசி போட்ட சான்றிதழ் தேவை என்று திமுக அரசு அறிவித்துள்ளது. நல்ல முயற்சி. STR நடித்துள்ள மாநாடு ரிலீஸ் ஆகும் நேரத்தில் அதை அறிவித்துள்ளனர். 


சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சன் பிக்சர்ஸின் அண்ணாதே ரிலீஸுக்கு தீபாவளி நேரத்தில் செய்தியை இன்னும் சிறப்பாக பரப்பியிருக்கலாம். அந்த பொன்னான வாய்ப்பை அவர்கள் தவறவிட்டது எவ்வளவு விசித்திரமானது? 


'அண்ணாத்தே' படத்திற்காக மாநாடு தீபாவளிக்கு வெளியாவதை நிறுத்தியதாக உறுதிப்படுத்தப்படாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'அண்ணாத்தே ரிலீஸுக்கு முன்பே திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை கட்டுப்பாடு நீக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்வோம். 






மேலும், அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கு செல்பவர்கள், கட்சி கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், பொது போக்குவரத்து மற்றும் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டால், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்த அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை நாம் நிச்சயமாகப் பாராட்டலாம். 


பள்ளிகள், சந்தைகள் மற்றும் பொது போக்குவரத்துக்கு இது நடைமுறையில் இல்லை என்பதை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் ரேஷன் அல்லது மதுபானங்களை விற்கும் அரசு கடைகளுக்கு, இது மிகவும் சாத்தியமானது, செயல்படுத்தக்கூடியது மற்றும் கண்காணிக்கக்கூடியது.


ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பல நாடுகளில், திரையரங்குகள், இசை நிகழ்ச்சிகள், வழிபாட்டுத் தலங்கள், விடுதிகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் போன்றவற்றில் நுழைவதற்கு கோவிட் தடுப்பூசிக்கான சான்று கட்டாயத் தேவை. எனவே கோட்பாட்டில், தடுப்பூசி ஆணை மிகவும் அவசியமானது மற்றும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால் இங்குஅனைவருக்கும் சட்டம் ஒன்றா என்பதுதான் கேள்வி” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண