நடிகை ராதாவின் மகளான கார்த்திகா நாயர் இன்று தனது 31-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளோடு வரவேற்கப்பட்டவர் கார்த்திகா நாயர்.


பெரும் எதிர்பார்ப்புகளை சுமந்து வந்த கார்த்திகா


கார்த்திகாவின் அம்மாவான நடிகை ராதா தமிழ் சினிமாவின் முன்னணி  நடிகையாக வலம் வந்தவர். அவரது வரிசையில் வந்த கார்த்திகா தனது அம்மாவைப் போலவே தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த இரு  நடிகராக வருவார் என்று அவர்மேல் எதிர்பார்ப்புகள் குவிந்தன.


கோ


மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கிய கோ திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார் கார்த்திகா நாயர். தனது முதல் படத்திலேயே அதிகளவிலான ரசிகர்களை பெற்றவர் என்று கார்த்திகாவைச் சொல்லலாம். ஆனால் முதல் படத்தைத் தொடர்ந்து குறிப்பிட்டு சொல்லும் வகையிலான எந்தப் படத்திலும் அவர் நடிக்கவில்லை என்பது.


அடுத்தடுத்த வாய்ப்புகள்


தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்தில் மகரம்ஞ்சு, தெலுங்கில் ஜோஷ், கன்னடத்தில் பிரிந்தாவனா, ஆகியப் படங்களில் நடித்த கார்த்திகாவிற்கு சொல்லிக் கொள்ளும் வகையிலான எந்த வெற்றியும் அமையவில்லை. 2013 ஆம் ஆண்டு வெளியான அன்னக்கொடி படத்தில் நடித்தார் கார்த்திகா. இதனைத் தொடர்ந்து எஸ்.பி. ஜனநாதன் இயக்கிய புறம்போக்கு என்கிற பொதுவுடைமை படத்தின் நடித்தார் கார்த்திகா நாயர். இந்தப் படத்தில் குயிலி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வழக்கமான கதாநாயகிகளைப் போல் இல்லாமல் வித்தியாசமான ஒரு கதாபாத்திரமாக இது இருந்தது.


வெளிவராத ”வா டீல்”


இதனைத் தொடர்ந்து அருண் விஜயுடன் வா டீல் என்கிறத் திரைப்படத்தில் இணைந்து நடித்தார் கார்த்திகா. ஆனால் சில சிக்கல்களால் இந்தப் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகளை தயாரிப்பு நிறுவனம் கைவிட்டுள்ளது.


சினிமாவில் இருந்து விலகினார்


2015 ஆம் ஆண்டு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார் கார்த்திகா. 2017 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ஆரம்ப் என்கிறத் தொலைக்காட்சித் தொடரில் தேவசேனா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் கார்த்திகா. இந்தக் கதாபாத்திரம் அவருக்கு நல்ல விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.


சினிமாவில் எல்லாருக்கு சமமான வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி கிடைப்பவர்கள் அனைவரும் நிலைத்து நின்றுவிடுவதுமில்லை. அதே நேரத்தில் அண்மைக்காலங்களில் திரைத்துறையில் இருப்பவர்கள் தங்களுக்கு இந்தத் துறை ஏற்றதாக இல்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்துவிட்டு விலகிக்கொள்கிறார்கள். சினிமா என்பது ஒரு தவம்  என்கிற மாதிரியான பொதுபிம்பங்களை சுமந்துகொண்டு எத்தனையோ நபர்கள் தங்களது வாழ்நாட்களை இழந்திருக்கிறார்கள், சுரண்டப்பட்டிருக்கிறார்கள், அடையாளம் தெரியாமல் மறைந்திருக்கிறார்கள். அப்படியான சூழ்நிலையில் குறிப்பிட்ட படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமாவில் வந்ததற்கும் சென்றதற்கும் கார்த்திகா நாயருக்கு நன்றி தெரிவித்துவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறலாம்.