கனி குஸ்ருதி
மலையாளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான பிரியாணி படத்தில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் கனி குஸ்ருதி. இஸ்லாமிய சமூகத்தை பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் அவர் நிர்வாணக் காட்சிகளில் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற சர்வதேச கான் திரைப்பட விழாவில் பாயல் கபாடியா இயக்கிய 'All We Imagine As Light' படத்திற்கு கிராண்ட் பிக்ஸ் விருது கிடைத்தது. இந்தப் படத்தில் கனி குஸ்ருதி மற்றும் திவ்ய பிரபா ஆகிய இருவர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் .
வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் ஜிஃபைவ் ஓடிடி தளத்தில் வெளியான தலைமைச் செயலகம் தொடரில் கனி குஸ்ருதி நடித்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. கான் திரைப்பட விழாவை முடித்து தற்போது கேரளா திரும்பியுள்ள கனி குஸ்ருதி பல்வேறு நேர்காணல்களை அளித்து வருகிறார். இந்த நேர்காணலில் அவர் பிரியாணி படத்தில் நடித்தது உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசியுள்ளார்.
நிதி நெருக்கடியால் தான் அந்த படத்தில் நடித்தேன்
”பிரியாணி படத்தில் அழகியலோ அரசியலோ என்னுடைய அரசியல் நிலைப்பாட்டுடன் சுத்தமாக ஒத்துப்போகவில்லை என்று இயக்குநர் சஜினிடம் சொன்னேன். இப்படத்தின் இயக்குநர் மிகவும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியச் சமூகத்தில் இருந்து வருபவர். அது அவருடைய கருத்து. ஆனால் படத்தின் கருத்தோடு என்னுடைய கருத்துடன் ஒத்துப்போகவில்லை பொதுவாக என்னுடைய அரசியல் கருத்துடன் ஒத்துப் போகாத படங்களில் நான் நடிப்பது இல்லை. படத்தின் இயக்குநர் சஜின் மீது இருந்த மரியாதையும் நிதி நெருக்கடியும் தான் இந்தப் படத்தில் நான் நடித்ததற்கான காரணம்” என்று அவர் கூறியுள்ளார்.
கேரளா ஸ்டோரி இயக்குநரின் அழைப்பை நிராகரித்த காரணம்
“தி கேரளா ஸ்டோரி படத்தின் இயக்குநர் சுதிப்தோ சென் தனது அடுத்த படத்திற்கான ஆடிஷனுக்கு என்னை அழைத்திருந்தார். என்னுடைய அரசியல் கருத்துடன் ஒத்துப்போகாத படங்களில் நான் நடிப்பது இல்லை அதனால் மறுத்துவிட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் சமீப காலத்தில் மலையாளப் படங்களில் ஏன் பெண் கதாபாத்திரங்கள் அதிகம் இடம்பெறவில்லை என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர், “மிகச்சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட மலையாள சினிமாவில் ஏன் சுவாரஸ்யமான பெண் கதாபாத்திரங்கள் எழுதப்படவில்லை, மேலும் அப்படியான கதாபாத்திரங்கள் சமீபத்தில் வெளியான மலையாளப் படங்களில் ஏன் சேர்க்கப்படவில்லை என்கிற கேள்வி நியாயமானது தான்” என்று பதிலளித்துள்ளார்.