இமாச்சல பிரதேசத்துக்கு யாரும் வரவேண்டாம் என பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார். 


ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான கங்கனா ரனாவத் இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ’தலைவி’ படத்தின் மூலம் தமிழுக்கு மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி-2 படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து மாதவனுடன் ஒரு படத்தில் நடிக்கவும் கமிட் ஆகி உள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘எமர்ஜென்சி’ என்ற இந்தி படத்தில் இந்திரா காந்தி நடித்துள்ளார். இந்த படத்தை திரையிடும் வேலைகளும் நடந்து வருகிறது. 


நடிப்பு மட்டுமின்றி சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கங்கனா, அரசியல் சார்ந்த கருத்துக்களை கூறி அடிக்கடி சர்ச்சையிலும் சிக்கி கொள்வது வழக்கம். இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்துக்கு யாரும் வர வேண்டாம் என கங்கனா ரனாவத் கேட்டு கொண்டது வைரலாகி உள்ளது. உத்தரகாண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருவதால் பெரும்பலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இமாச்சல பிரதேசத்திலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு யாரும் வரவேண்டாம் என கங்கனா ரனாவத் கேட்டு கொண்டுள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில், வெள்ளத்தில் கார் அடித்து செல்லும் வீடியோவை பகிர்ந்த கங்கனா, வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ளதால் இமாச்சல பிரதேசத்துக்கு வருவதை தவிர்க்கவும் என கேட்டு கொண்டுள்ளார். 


கங்கனா ரனாவத் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதால் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.