கஜோல்


தமிழில் அரவிந்த்சாமி, பிரபுதேவா  இணைந்து நடித்த ‘மின்சார கனவு’ திரைப்படத்தின் வழியாக தமிழ் ரசிகர்களிட அறிமுகமானவர் நடிகை கஜோல் . இந்தப் படம் மூலமாக தமிழ்நாட்டில் ஏராளமானோர் கஜோலின் தீவிர ரசிகர்களாக உருவெடுத்தனர். பின்னர், வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் கஜோல் நடித்திருந்தார்.


தமிழில் பெரியளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் இந்திப் படங்களில் நடித்து எல்லா மொழி ரசிகர்களாலும் பேசப் பட்ட நடிகைகளில் ஒருவர். ஷாருக் கான் உடன் இவர் நடித்த படங்கள் அனைத்துமே இன்று வரை தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த படங்களாக இருந்து வருகிறது.


திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக பெண் நடிகர்களுக்கு திரைப்படங்களில் சம உரிமை வழங்கப்படுவது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர் கஜோல். திரைப்படங்களில் பெண் நடிகர்களுக்கு சம அளவிலான சம்பளம் வழங்குவது தொடர்பாக சமீபத்தில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட கஜோல் இப்படி சொல்லியிருக்கிறார்.


“ஒரு பெண் நடிகரை வைத்து ஹாலிவுட்டில் எடுத்தது போல் ஒண்டர் வுமன் மாதிரியான ஒரு படத்தை முதலில் இங்கு எடுக்க வேண்டும். அது ஷாருக் கான் நடித்த பதான் திரைப்படத்திற்கு நிகரான வசூல் ஈட்டும் படமாக வெளிவரட்டும். இது சாத்தியமானால் பெண்களின் சம்பளம் தானாக உயரும்” எனக் கூறியுள்ளார்.


சென்ற இடத்தில் எல்லாம் கீழே விழும் கஜோல்


பொதுவாக நடிகைகள் என்றால் அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் சில எழுதப் படாத விதிமுறைகளை கடைபிடித்து வருகிறார்கள். ஒரு ஆடையை ஒரு நிகழ்ச்சிக்கு மேல் இன்னொரு முறை போடக் கூடாது. வயதை தெரிய படுத்தக் கூடாது என இப்படி பல நிர்பந்தங்களுக்கு தங்களை உட்படுத்திக் கொள்கிறார்கள். சமீபத்தில் பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது திருமண நாளில் அணிந்த அதே புடவையை தேசிய விருது வாங்கும்போதும் அணிந்திருந்தார்.


இதை ஷாருக் கானின் மகளான சுஹானா கான் நிகழ்ச்சி ஒன்றில் வியந்து பாராட்டி பேசியிருந்தார். இதனை செய்வதற்கு மிகப்பெரிய துணிச்சல் வேண்டும் என்பது போல் அவர் பேசியிருந்தார். இதனை சமூக வலைதளத்தில் பகிர்ந்த நெட்டிசன்கள் இந்த உலகத்தில் மிடில் கிளாஸ் என்கிற ஒன்று இருப்பதை ஷாருக் கானின் மகள் முதல் முறையாக உணர்ந்த மாதிரி பேசுகிறார் என்று அவரை ட்ரோல் செய்திருந்தார்கள்.






இப்படியான பாலிவுட் சினிமாவில் பொது இடத்தில் கேமராக்கள் பின் தொடரும் போது ஒரு நடிகை கால் தடுமாறி கீழே விழுந்தால் அவரது நிலைமையை யோசித்து பாருங்கள். ஆனால் எந்த வித தயக்கமும் இல்லாமல் தான் கீழே விழுந்த தருணங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து சிரித்து மகிழ்ந்திருக்கிறார் நடிகை கஜோல் . அதுவும் ஒருமுறை இல்லை பலமுறை கீழே விழும் ஒருவராக இருந்திருக்கிறார் கஜோல்.