சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு வெளியேறுவதாக தகவல் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார் நடிகை கஜோல்.
நடிகை கஜோல் தான் சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு வெளியேறுவதாக திடீர் முடிவு எடுத்துள்ளார். தனது வாழ்க்கையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளார். இந்தத் தகவலால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறார்கள். மேலும் கஜோல் மற்றும் அஜய் தேவ்கன் ஆகிய இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்களா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டார்கள்.
கஜோல் சில காலமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அதிகம் பயன்படுத்தி வந்தார். பெரும்பாலான நேரங்களில் தனது கணவர் அஜய் தேவ்கன், மகன் யுக் மற்றும் மகள் நைஸா என தனது குடும்பத்தினரின் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். மேலும் தனது நடிப்பில் வெளிவந்த படங்களை நினைவுபடுத்தும் விதமாக அவை குறித்தும் பதிவிடுவார். அண்மையில் தான் நடித்து வெளியான துஷ்மன் திரைப்படம் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி அந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்திருந்தார் கஜோல்.
அதில் “நான் நடிக்க சம்மதித்த படங்களில் என்னை மிக அச்சுறுத்தியப் படம் துஷ்மன். அதே நேரத்தில் நான் பார்த்தப் படங்களில் என்னை அதிகம் பயம் கொள்ளச் செய்த படமும் இதுதான்.இன்றுவரை இந்தப் படத்தை என்னால் பயப்படாமல் பார்க்க முடியாது.” என பதிவிட்டிருந்தார். ரேவதி இயக்கிய சலாம் வெங்கி என்கிற திரைப்படத்தில் நடித்த கஜோல். இதனைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியாக இருக்கும் லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.
லஸ்ட் ஸ்டோரீஸ்
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. தமன்னா, கஜோல், மிருனால் தாகூர் ஆகியோர் இதில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
பாலியல் சார்ந்த கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆந்தாலாஜி லஸ்ட் ஸ்டோரிஸ். சமூகத்திலும் பாலியல் சார்ந்த கதைகள் குறித்தான ஒரு புரிதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது இந்த படம். மேலும் திரைப்படங்களில் பாலியல் ரீதியிலான கதைகள் வெளிப்படையாக பேசப்படாத காரணத்தினால் பாலிவுட்டின் நான்கு முக்கிய இயக்குநர்கள் இந்த ஆந்தாலாஜியை இயக்க நியமிக்கப்பட்டார்கள். இயக்குநர் அனுராக் காஷ்யப், கரண் ஜோஹார், ஜோயா அக்தர் மற்றும் திபாகர் பானர்ஜீ ஆகியோர் முதல் பாகத்தை இயக்கினார்கள். ராதிகா ஆப்தே, மனிஷா கொய்லாரா, கியாரா அத்வானி, விக்கி கெளஷல் போன்ற முக்கிய நடிகர்கள் இதில் நடித்திருந்தார்கள்.
முதல் பாகத்தில் இயக்குனர் அனுராக் கஷ்யப் மற்றும் ஜோயா அக்தர் இயக்கிய பகுதிகள் பரவலாக பேசப்பட்டன. தற்போது லஸ்ட் ஸ்டோரீஸின் இரண்டாம் பாகத்தின் டீஸர் வெளியாகி பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.