‘மின்சாரக் கனவு’ படத்தில் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த பாலிவுட் நடிகை கஜோலின் பிறந்தநாள் இன்று.
கஜோல்
தமிழில் அரவிந்த்சாமி, பிரபுதேவாவுடன் இவர் இணைந்து நடித்த ‘மின்சார கனவு’ திரைப்படம் வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படம் மூலமாக தமிழ்நாட்டில் ஏராளமானோர் கஜோலின் தீவிர ரசிகர்களாக உருவெடுத்தனர். பின்னர், வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்திலும் கஜோல் நடித்திருந்தார்.
காதல், திருமணம்!
1992ம் ஆண்டு திரைத்துறையில் அறிமுகமான கஜோல், ஷாரூக்கான், சல்மான் கான் என்று இந்தி திரையுலகின் வெற்றி நாயகர்கள் பலருடன் இணைந்து நடித்து பல சூப்பர் ஹிட் படங்களை அளித்துள்ளார். நடிகை கஜோல் பாலிவுட்டின் பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். பாலிவுட்டின் மிகவும் பிரபல தம்பதியான இவர்கள், 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு நைசா தேவ்கன் என்ற மகளும், யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர்.
கஜோல் நடித்த வெற்றிப்படங்கள்
குச் குச் ஹோதா ஹே (Kuch kuch Hota Hai), தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே (Dilwaale Dulhaniya Le Jayenge), மை நேம் இஸ் கான் (My Name is Khan) , கபி குஷி கபி கம் (Kabi Kushi Kabi Gum), பாஸிகர் (Baazigar) என ஷாருக் கானுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக இவர் நடித்த தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே திரைப்படம், 1000 வாரங்கள் ஒரு திரையரங்கில் திரையிடப்பட்டு சாதனை படைத்தது. இந்தி, மட்டும் இல்லாமல் அனைத்து மொழிகளிலும் இவர் நடித்த பாடலான ‘துஜே தேகா தோ ஏ ஜானா சனம்’ பாடல் இந்தியா முழுவதும் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.
பெண் உரிமை
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக பெண் நடிகர்களுக்கு திரைப்படங்களில் சம உரிமை வழங்கப்படுவது குறித்தும் தொடர்ந்து பேசி வருபவர் கஜோல். திரைப்படங்களில் பெண் நடிகர்களுக்கு சம அளவிலான சம்பளம் வழங்குவது தொடர்பாக சமீபத்தில் நடந்த விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட கஜோல் இப்படி சொல்லியிருக்கிறார்.
“ஒரு பெண் நடிகரை வைத்து ஹாலிவுட்டில் எடுத்தது போல் ஒண்டர் வுமன் மாதிரியான ஒரு படத்தை முதலில் இங்கு எடுக்க வேண்டும். அது ஷாருக் கான் நடித்த பதான் திரைப்படத்திற்கு நிகரான வசூல் ஈட்டும் படமாக வெளிவரட்டும். இது சாத்தியமானால் பெண்களின் சம்பளம் தானாக உயரும்” எனக் கூறியுள்ளார்.
கம்பேக் கொடுக்கும் கஜோல்
சில காலமாக திரைப்படங்களில் நடிக்காத கஜோல் சமீபத்தில் லஸ்ட் ஸ்டோரீஸ் இரண்டாம் பாகத்தில் காணப்பட்டார், த டிரையல் என்கிற அவர் நடித்த இணையத் தொடர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தொடர்ந்து வேறு சில படங்களிலும் நடித்து வருகிறார். கஜோலுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!