தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை காஜல் அகர்வால். மும்பையை சேர்ந்த இவர் 2004-ம் ஆண்டு இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகில் கால் பதித்த இவர், 2008-ல் பரத் நடிப்பில் வெளியான 'பழனி' படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இருந்த போதிலும் தொடர்ச்சியாக தெலுங்கில் நடித்த இவர், ராஜமெளலி இயக்கத்தில் 2009-ல் வெளியான 'மகதீரா' படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து ஒட்டுமொத்த திரை உலகின் கவனத்தை ஈர்த்தார்.
இந்த திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை பெற்று தந்தது. இந்த வெற்றியின் தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் மட்டுமே நடித்து வரும் காஜல் அவ்வப்போது இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இருப்பினும் பெரும்பாலும் இவர் தமிழ், தெலுங்கு மொழி படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
தமிழில் கார்த்தியுடன் நான் மகான் அல்ல, ஆல் இன் ஆல் அழகுராஜா, விஜயுடன் துப்பாக்கி, ஜில்லா, தனுஷுடன் மாரி, சூர்யாவுடன் மாற்றான், அஜித்துடன் விவேகம், என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தெலுங்கிலும் அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், மகேஷ் பாபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
இந்நிலையில் காஜல் தொழில் அதிபர் கவுதம் கிச்சுலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் இவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு நீல் என பெயர் சூட்டப்பட்டது. தனது குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முடியாததால் காஜல் வருத்தத்தில் உள்ளதாகவும், சினிமாவை விட்டு முழுமையாக விலக அவர் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் பாலகிருஷ்ணா ஜோடியாக பகவத் கேசரி படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க,