வல்லவன் படத்தில் சொன்னது ஒன்றும், நடந்தது ஒன்றும் இருந்ததால் இன்றளவும் எனக்கு மிகப்பெரிய வருத்தம் இருப்பதாக நடிகை சந்தியா நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சந்தியா
இயக்குநர் ஷங்கரின் தயாரிப்பில், பாலாஜி சக்திவேலின் இயக்கத்தில் பரத் நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் “காதல்”. ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்த இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சந்தியா. கேரளாவைச் சேர்ந்த இவர் காதல் சந்தியா என இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். அப்படத்தை தொடர்ந்து டிஷ்யூம், வல்லவன், கண்ணாமூச்சி ஏனடா, கூடல் நகர், தூண்டில், மகேஷ் சரண்யா மற்றும் பலர், மஞ்சள் வெயில், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் என பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார்.
காதல் படம் பற்றி நெகிழ்ச்சி
இதனிடையே நேர்காணல் ஒன்றில் சந்தியா, காதல் படம் பற்றி பேசும்போது, “நான் பள்ளியில் படிக்கும்போது எதிர்பாராத விதமாக தான் இந்த நடிக்கும் வாய்ப்பு வந்தது. எனக்கு சினிமா ரொம்ப பிடிக்கும். அப்போது ஜோதிகா தான் என்னுடைய பேவரைட் நடிகையாக இருந்தார். டான்ஸ் எல்லாம் ஆடுவேன். பிற கலைகளும் கற்றுக் கொண்டிருந்தேன். மேனேஜர் மனோஜ் கிருஷ்ணா எங்களுடைய குடும்ப நண்பர். நான் 9வது படித்துக் கொண்டிருக்கும்போது அவர் தான் மாடலிங்கில் ஆர்வம் இருக்கிறதா என கேட்டு போட்டோஷூட் எடுத்தார். அந்த புகைப்படங்கள் இயக்குநர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் அலுவலகத்திகு சென்ற நிலையில் என்னை டெஸ்ட் ஷூட் செய்ய அழைத்தார்கள்.
காதல் படத்திற்கு 2 நாட்கள் நடந்த டெஸ்ட் ஷூட்டில் தேர்வு செய்யப்பட்டேன். உடனடியாக ஷூட்டிங் சென்றனர். அந்த படத்தின் வெற்றியை நான் உணருவே எனக்கு பல நாட்கள் எடுத்தது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளுக்கு எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே பாராட்டுகள் கிடைத்தது” என கூறினார்.
சிம்பு மீது வருத்தம்
தொடர்ந்து, “காதல் படம் முடிந்ததும் தமிழில் நான் டிஷ்யூம் படம் பண்ணினேன். அதன்பிறகு வல்லவன் படம் அமைந்தது. தயாரிப்பாளர் தேனப்பன் என்னை இந்த படத்துக்காக அணுகினார். கதையெல்லாம் கேட்டு ஓகே பண்ணிய பிறகு ஷூட்டிங் சென்றோம். வல்லவன் படத்தில் என்னை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற வருத்தம் எனக்கு எப்பவுமே இருக்கிறது. காரணம், அது என்னுடைய 3வது படம். கதை சொன்ன மாதிரி பண்ணியிருந்தால் பிரச்னை இல்லை. அப்படி செய்யவில்லை” என தெரிவித்தார்.
2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான வல்லவன் படத்தை சிலம்பரசன் நடித்து இயக்கினார். இப்படத்தில் சந்தியா, ரீமாசென், நயன்தாரா ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்தனர். இதில் முதலில் சந்தியா தான் முதன்மை ஹீரோயினாக இருக்கும்படி கதை உருவாக்கப்பட்டதாகவும், பின்னர் நயன்தாரா உள்ளே வந்தவுடன் கதையில் மாற்றம் செய்யப்பட்டு சந்தியாவுக்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.