தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ள ஹனிரோஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
தமிழில் முதல் கனவே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ஹனிரோஸ். தொடர்ந்து சிங்கம்புலி , மல்லுக்கட்டு , கந்தர்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஆனால் தமிழை விட தெலுங்கு சினிமா அவரை அதிகமாக வாய்ப்பளித்தது. மலையாளத் திரையுலகைச் சேர்ந்த ஹனிரோஸ் தற்போது தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோயினாக திகழ்கிறார்.
தெலுங்கில் சில மாதங்களுக்கு முன் வெளியான பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்த வீரசிம்ம ரெட்டி படத்தில், ஒரு பாலையாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. மேலும் பல மொழிகளிலும் அவருக்கு வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழில் ஹனிரோஸ் நடிக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறிமுக இயக்குநர் ஆனந்தி பாலா இயக்கும் இந்த படத்திற்கு ‘ரேச்சல்’ என பெயரிடப்பட்டு, இதன் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. சமீபகாலமாகவே ஹாட் போட்டோஷூட் நடத்தி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஹனிரோஸ், இந்த மோஷன் போஸ்டரில் அப்படியான உடை அலங்காரத்துடன் இறைச்சி வெட்டும் காட்சி இடம் பெற்றுள்ளது.
ரேச்சல் படத்துக்கு ராகுல் மனாபாத் திரைக்கதை எழுதும் நிலையில், சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். அங்கித் மேனன் இசையமைக்க, எடிட்டராக மனோஜ் பணியாற்றுகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பேன் இந்தியா படமாக ரேச்சல் படம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கேரள மாநிலம் மன்னார்காட்டில் செயல்பட்டு வரும் புதிய வீட்டு உபயோகப் பொருட்கள் கடை திறப்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஹனிரோஸ் சென்றிருந்தார். அவரது வருகையை கேள்விப்பட்ட சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஹனிரோஸ் மீது சிலர் விழுந்தனர். ஆனால் எதற்குமே கோபப்படாமல் எல்லோரையும் பார்த்து புன்னகைத்தவாறே ஹனிரோஸ் சென்ற செயல் இணையத்தில் பாராட்டைப் பெற்றது.