பிரபல ஹிந்தி தொலைக்காட்சி நடிகை ஹினா கான் மார்பக புற்றுநோயுடன் போராட்டி வருவதாகவும், புற்றுநோய் மூன்றாவது கட்டத்தில் இருப்பதாகவும் அவரே தனது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இது தற்போது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 


என்ன சொன்னார் ஹினா கான்..? 


தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்பக புற்றுநோயை பற்றி பேசிய ஹினா கான், “கடந்த சில நாட்களாகவே என்னை பற்றி சில வதந்திகள் பரவி வருகிறது. இதுகுறித்து நானே உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். குறிப்பாக என்னை நேசிக்கும் மக்களுக்கு.. 


எனக்கு மார்பக புற்றுநோய் உள்ளது. அதுவும் மூன்றாவது கட்டத்தில் உள்ளது. அதற்கான சிகிச்சையை தற்போது தொடங்கியுள்ளோம். நான் கடந்த சில நாட்களாக பல பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், நான் நலமாக இருக்கிறேன் என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இந்த நோயை எதிர்த்து போராட நான் முழுமையாக தயாராக இருக்கிறேன். இந்த நேரத்தில் என்னை வலிமையுடன் வைத்திருக்கும் எதையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். 


நீங்கள் கொடுத்த அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி. ஆனால், இந்த நேரத்தில் எனக்கு கொஞ்சம் தனிமை தேவை. புற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றி பெற்று விரைவில் குணமடைவேன் என நானும் எனது குடும்பத்தினரும் நம்பிக்கையுடன் உள்ளோம். அதே நேரத்தில் உங்கள் அன்பும், பிரார்த்தனையும் எனக்கு மிகவும் தேவை. ” என பதிவிட்டுள்ளார். 






யார் இந்த ஹினா கான்..? 


யே ரிஷ்தா க்யா கெஹ்லதா என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அக்ஷரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, ஒவ்வொரு வீட்டிலும் தன் பெயரை பதிவு செய்தார். அதன்பிறகு, நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் 11ல் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் இவர் வெற்றிபெறவில்லை என்றாலும், ஹினா கானின் புகழ் இரண்டு மடங்கு அதிகரித்தது. 


தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தவிர, ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதுபோக, ஹினா கான் பல மியூசிக் ஆல்பம் சாங்கள் மூலம் மக்களின் மனதினை வென்றார். 


தந்தை மரணத்தால் பெரிய அடி: 


ஹினா கானுக்கு அவரது பெரிய சொத்தே குடும்பம்தான். இண்டர்வியூகள் கொடுக்கும்போது கூட தனது குடும்பத்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார். கடந்த 2021ம் ஆண்டு ஹினா கான் தந்தை அஸ்லம் கான் மாரடைப்பால் உயிரிழந்தார். அப்போது இவர் காஷ்மீரில் படப்பிடிப்பில் சிக்கி கொண்டார். இன்று முதல் இன்று வரை தன் தந்தையை இழந்த சோகத்தை மறக்க முடியாமல் தவித்து வருவதாக பல்வேறு நேர்காணல்களில் தெரிவித்துள்ளார்.