ஆடிஷனுக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் இனிமேல் சினிமாவில் நடிக்கக்கூடாது என தான் முடிவெடுத்ததாக பிரபல நடிகை ஹேமா ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
கமல்ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “நெல்லை பாய்ஸ்”. இந்த படத்தில் அறிவழகனும், நாயகியாக பாண்டியஸ் ஸ்டோர்ஸ் புகழ் ஹேமா ராஜ்குமாரும் நடிக்கின்றனர். மேலும் வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஆணவக் கொலைகள் அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் திருநெல்வேலி மீது சுமத்தப்படும் விமர்சனங்களையும் களையும் வண்ணம் இருக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (நவம்பர் 17) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஹேமா, ‘நெல்லை பாய்ஸ் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தன்னுடைய பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சிறப்பு விருந்தினராக வந்திருக்கும், மக்களவை எம்.பி., தொல். திருமாவளவனுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் இன்றைய காலத்தில் இருக்கும் தொழில்நுட்ப வசதிகளுடன் மிகப்பெரிய போராட்டத்திற்கு மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களை மாதிரி நானும் ரொம்ப ஆர்வமா இந்த படத்தைப் பார்க்க காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தின் 2 பாடல்களை பார்க்கும்போது நெல்லை பாய்ஸ் சிறப்பாக வந்திருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எந்த ஒரு படத்தின் கதையையும் எவ்வித குறுக்கீடும் இல்லாமல் தான் எடுக்க நினைத்ததை உருவாக்கி அதனை வெளியிடுவது தான் ஒரு இயக்குநரின் வெற்றி என நான் நினைக்கிறேன். அதை இயக்குநர் கமல் ஜி செய்திருக்கிறார். இந்த நேரத்தில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நான் ஒரு சிறிய வேண்டுகோளை வைக்க நினைக்கிறேன்.
நான் நிறைய படங்களின் ஆடிஷன்களுக்கு சென்றிருக்கிறேன். அப்போது என்கிட்ட சீரியல் நடிகை தானே நீங்கள் என எங்களை ஒரு வரிசையில் தனித்துவப்படுத்துவார்கள். ஒரு குறிப்பிட்ட கேரக்டர்களை தான் வழங்குவார்கள். அந்த ஒரு விஷயத்தால் இனிமேல் சினிமாவே நடிக்கக்கூடாது என்ற முடிவுக்கு வந்து விட்டேன். சீரியலே எனக்கு போதும். அங்கேயே நான் ராணியாக இருந்துக் கொள்கிறேன் என்ற நிலைக்கு தள்ளப்பட்டேன். சீரியலில் நடிக்கும் பல பிரபலங்கள் நல்ல திறமைகளுடன் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெரிய திரை நடிகர்கள், சின்னத்திரை நடிகர்கள் என்ற பிரிவினை கிடையாது.
தயவு செய்து சீரியலில் நடிப்பவர்களுக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுங்க என கேட்டுக் கொள்கிறேன். நான் இந்த நிகழ்ச்சிக்கு வரும்போது ஒருவித பயத்துடன் தான் வந்தேன். ஏனென்றால் இந்த இசை வெளியீட்டு விழாவில் உங்கள் எடை எவ்வளவு?, ஏன் இந்த மாதிரி உடை அணிந்து வருகிறீர்கள்? என கேள்வி எழுப்புகிறார்கள். அதனை நினைத்து பயந்து விட்டேன். படம் தொடர்பாக என்ன கேள்வி வேண்டுமானாலும் கேளுங்கள் பதில் சொல்கிறேன். நெல்லை பாய்ஸ் படத்துக்கு ஊடகவியலாளர்கள் மிகுந்த ஆதரவை அளிக்க வேண்டும்.