என்னை உருவகேலி செய்யும் வகையில் கேள்வி கேட்டதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகை கௌரி கிஷன் கோபமாக தெரிவித்தது திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

2018 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த ‘96’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கௌரி கிஷன். இந்த படத்தில் நடிகை த்ரிஷாவின் சிறு வயது கேரக்டரில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் அவர் நடித்தார். இதனிடையே கௌரி கிஷனின் நடிப்பில் அடுத்ததாக ‘அதர்ஸ்’ என்ற படம் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. 

முன்னதாக இரண்டு நாட்கள் முன்பு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, படத்தின் ஹீரோவிடம், ஹீரோயினை தூக்கி வைத்து நடனம் ஆடினீர்களே, அது எப்படி இருந்தது, அவங்க வெயிட்டா இல்லையா? என்கிற ரீதியில் கேள்வி எழுப்பினார். இதற்கு ஹீரோ ஆதித்யா ராம் சமாளிக்கும் வகையில் பதிலளித்தார். ஆனால் கௌரி கிஷன் எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் கடந்து சென்றார். 

Continues below advertisement

இப்படியான நிலையில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த கௌரி கிஷன், பத்திரிக்கையாளர் தன்னுடைய உடல் எடை குறித்து கேட்ட கேள்வியை கடுமையாக சாடினார். மூளை இல்லாதவர்கள் எப்படி நடப்பார்களோ அப்படித்தான் அந்த கேள்வி இருந்தது. யாரிடமும் அந்த கேள்வியை கேட்காதீர்கள். அந்த செய்தியாளரின் நம்பரை வாங்கி பேச வேண்டும் என நினைத்தேன். ஆனால் தேவையில்லாத விவாதம் ஏற்படும் என தவிர்த்து விட்டேன் என தெரிவித்திருந்தார்.  எனினும் அந்த கேள்வியால் தான் மிகவும் அதிருப்தியடைந்ததாக தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இன்று (நவம்பர் 6) அதர்ஸ் படத்தின் இயக்குநர், ஹீரோ, ஹீரோயின் ஆகிய மூன்று பேரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கௌரி கிஷனிடம் பத்திரிக்கையாளரை கடுமையாக குற்றம் சாட்டியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளருக்கும், கௌரி கிஷனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தொடந்து அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.

அவரை மன்னிப்பு கேட்கும்படி வற்புறுத்த கௌரி கிஷன் மறுத்தார். நீங்கள் தான் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அந்த பத்திரிக்கையாளரிடம் கூறினார். மேலும் என்னுடைய எடையை பற்றி தெரிந்து நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள், என்னைப் பொறுத்தவரை உங்கள் கேள்வி உருவகேலி செய்தது போல தான் இருந்தது. அன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தில் இடம்பெற்ற என்னுடைய கேரக்டர் பத்தி எதுவும் கேட்கவில்லை. என்னோட எடைக்கும், இந்த படத்துக்கும் என்ன சம்பந்தம் என தெரியவில்லை” என கௌரி கிஷன் கடுமையாக சாடினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.