தமிழ் சினிமாவில் அம்மாக்கள்


தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றால் கண்களை மூடிக் கொண்டு ஒரு சில நடிகைகளின் பெயர்களை சொல்லிவிடலாம். ஆச்சி மணோரமா, சரண்யா பொண்வண்ணன், ஊர்வசி உள்ளிட்டவர்கள் அம்மா கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை இதற்கு முன்னதாகக் கவர்ந்திருக்கிறார்கள்.




சமீப காலமாக தொடர்ச்சியாக பல சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து கவனமீர்த்து வருகிறார் கீதா கைலாசம். தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள ஸ்டார் படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. 


கீதா கைலாசம்






இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் மகன் பால கைலாசத்தின் மனைவி கீதா கைலாசம். எழுத்தாளரான இவர் தற்போது பல்வேறு குணச்சித்திரக் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதியின் மனைவியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய நட்சத்திரம் நகர்கிறது படத்தில் கலையசனின் அம்மாவாக கலக்கல் பர்ஃபாமன்ஸ் வழங்கி இருந்தார் என்றே சொல்லலாம்.


எமோஷனல் டிராமா செய்து தனது மகனை எப்படி தன் வழிக்கு வரவழைக்கும் ஒரே காட்சியில் தனது எதார்த்தமான நடிப்புத் திறமையை வெளிக்காட்டியிருப்பார்.




தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன், லவ்வர் படத்தில் மணிகண்டனின் அம்மாவாக, தற்போது ஸ்டார் படத்தில் கவினின் அம்மாவாக என இன்றைய தலைமுறையினரின் மனதில் செண்டிமெண்ட் அம்மாவாக இடம்பிடித்துள்ளார் கீதா கைலாசம்.


இந்தப் படங்கள் தவிர்த்து வெந்து தணிந்தது காடு, வீட்ல விசேஷம், டியர், இன்ஸ்பெக்டர் ரிஷி, நவரசா, கட்டில், அனல்மேலே பனித்துளி உள்ளிட்ட படங்கள் மற்றும் இணைய தொடர்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஒரு சில காட்சிகளோ முக்கியக் கதாபாத்திரங்களோ கீதா கைலாசத்தில் நடிப்பு தனது கதாபாத்திரங்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் உள்ளது. மேலும் சாதாரணமான ரோல்களாக இல்லாமல் ஒரு படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு முக்கிய பங்கு இருக்கும் கதைகளையே அவர் தேர்வு செய்து வருகிறார். இனி வரக் கூடியப் படங்களில் அம்மா என்று மட்டுமில்லாமல் பல்வேறு குணச்சித்திர ரோல்களில் அவரை நிறையப் பார்க்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.