பேயிருக்க பயமேன், ரீ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த பிரபல நடிகை காயத்ரி ரேமா, சமீபத்தில் திரைக்கூத்து இணையத்திற்கு ஒரு நேர்காணம் அளித்திருந்தார். அதில், துறை ரீதியாக தனக்கு வாய்ப்பு வழங்க தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோர் பாலியல் தொல்லை தந்ததாக பரபரப்பு குற்றங்களை முன் வைத்திருக்கிறார். இதோ அவரது பேச்சு...


 


‛‛முகமறியான் ஆடியோ வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் ராஜன், இசையமைப்பாளர் கங்கை அமரன் சார், சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கே.என்.ராஜன் பேசும் போது, ‛என்னுடைய முதல் படம் என்பதால் நான் ஆடியோ வெளியீட்டிற்கு வந்திருப்பதாக,’ பேசினார். நான் பின்னால் அமர்ந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என் மனதில் தோன்றியது, ‛நான் அதிகம் பங்கேற்றதே ஆடியோ வெளியீட்டு விழாவில் தான்’ என்று யோசித்து சிரித்துக் கொண்டிருந்தேன்.




அதன் பின் கங்கை அமரன் சார் பேசும் போது, ‛என்னம்மா ஜீன்ஸ் போட்டு வந்திருக்க.. புடவை கட்டி வரக்கூடாதா’ என்று கேட்டார். அப்போதும் எனக்கு ஒன்று மனதிற்குள் தோன்றியது. ‛இங்கே மட்டும் ஜீன்ஸ் போட்டு வரக்கூடாது... ஆனால், படத்தில் மட்டும் கவர்ச்சி வேணும்...’ என்று தான் மனதிற்கு தோன்றியது. ஆனால் நான் வேறு எதையும் சொல்லிக்கொள்ளவில்லை.


அப்புறம், தயாரிப்பாளர்களை நடிகைகள் மதிப்பதில்லை என்று பேசினார்கள். எனக்கு அந்த கால படப்பிடிப்பு பற்றி தெரியாது. அந்த காலத்தில், தயாரிப்பாளர்கள் ஹீரோயின்களிடம் வெளிப்படையாக எதுவும் கேட்டிருக்க மாட்டார்கள். அவர்கள் தங்கள் வேலையை மட்டும் செய்திருப்பார்கள். பணம் கொடுத்து ஒரு முதலாளியாக சரியாக நடந்திருப்பார்கள். ஆனால், இன்று இருக்கும் தயாரிப்பாளர்கள் அப்படி இல்லை. எல்லாவற்றையும் ஓப்பனாக கேட்கிறார்கள். 



எடுத்ததும் தயாரிப்பாளர் இப்படி கேட்கிறாரே என நினைக்கும் போது, அவர்களிடம் மரியாதை வராது. இவ்வளவு பெரிய இடத்தில் இருப்பவர், இப்படி கேட்கிறாரே என்று தான் தோன்றும். அதிலும், நாங்கள் பார்க்கும் பெரும்பாலான தயாரிப்பாளர்கள், எங்கள் அப்பா வயது அல்ல, எங்கள் தாத்தா வயதில் இருக்கிறார்கள். அவர்கள் இப்படி கேட்கும் போது, மனதில் இருந்து மரியாதை சென்று விடும். அந்த வயதில் இருக்கும் ஒருவர், நம்மிடம் ரோட்டில் கேட்டாலே கோபம் வரும், இவ்வளவு பெரிய ஆள் கேட்கும் போது எப்படி இருக்கும்?


இந்த வயசுல ஏன் இப்படி கேட்குறாரு... என்று அவர் மீதான மரியாதை குறைந்துவிடுகிறது. முன்பு முதலாளி என்று தயாரிப்பாளர்கள் கவுரமாக நடந்து கொண்டார்கள்; இன்று இப்படி இல்லை. அப்படி இருக்கும் போது, எல்லாவற்றிக்கு ஹீரோயினை தப்பு சொன்ன எப்படி சார்? என மனதிற்கள் யோசித்துக் கொண்டிருந்தனர். 


நான்கு முறை, தயாரிப்பாளர்கள் பேச்சோட நிற்காமல், நேரடியாக உடலில் கை வைத்து, ஆசைக்கு அழைத்தார்கள். அப்போது, அவர்களை நான் தள்ளிவிட்டேன். ‛சார் நான் அதுக்கு வரலை... என்னை மன்னித்து விடுங்கள் என, அங்கிருந்து சென்றிருக்கிறேன். இது தயாரிப்பாளர்கள் மட்டுமல்ல, நடிகர்களிடத்திலும் இது நடந்துள்ளது.




ஒரு பிரபல நடிகர் ஒருவர் என்னிடம் தவறான எண்ணத்தில் தொடர்பு கொண்டார்.‛ஏற்காடு போலாம்னு இருக்கேன்... வர்றீங்களா...’ எனக்கேட்டார். ‛உங்கள் மனைவி இருக்கிறார்களே அவர்களை அழைத்துச் செல்லலாமே சார்...’ என நான் கேட்டேன். ‛ஃபன் பண்றதுக்கெல்லாம் மனைவியை அழைத்துச் செல்வார்களா?’ என்று அவர் கூறினார.் ‛இல்லை சார்... நான் அப்படி இருந்திருந்தால், இப்போது நீங்கள் என் மேனேஜரிடம் தான் பேசியிருப்பீர்கள்; அந்த அளவிற்கு நான் வளர்ந்திருப்பேன். நான் அப்படியெல்லாம் வளர ஆசைப்படவில்லை’ என்று கூறிவிட்டேன். நான் என் திறமையில் வளர முயற்சிக்கிறேன். 


பல இயக்குனர்கள் அவர்களின் ஆசைக்கு அழைத்து, அதை நான் மறுத்ததால், எனக்கு பல வாய்ப்புகள் பறிபோயிருக்கிறது. இப்படி ஒரு நிலை எடுத்து தான், இந்த துறையில் தொடர வேண்டும் என்று நான் விரும்பவில்லை. பல துறைகளில் இந்த நிலை இருக்கிறது. அதற்காக நாம் இந்த துறையை விட்டு போகக்கூடாது என்று தான் பயணிக்கிறேன். பயந்து ஒதுங்க ஆரம்பித்தால், புதியவர்கள் யாருமே சினிமாவுக்கு வரமாட்டார்கள். இந்த பிரச்னைகள் இருப்பதை வெளியில் சொன்னால் தான், இதெல்லாம் மாறும் என நம்புகிறேன். 


‛மீ டூ’ பெரிய பிரச்சாரமாக வந்தும் கூட, இன்னும் பல விசயங்கள் மாறவில்லை. இன்னும் பழைய நிலையே தொடர்கிறது. இந்த பேட்டியை பார்த்தாவது, அந்த எண்ணத்தில் இருக்கும் யாராவது மாறலாம் என்பதால் தான், இதை தெரிவிக்கிறேன்.