நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் ஒரு காட்சி எடுக்க மறந்ததாக நடிகை காயத்ரி தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன்,விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்த விக்ரம் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அனிருத் இசையமைத்திருந்த இந்த படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இவரே விக்ரம் படத்தின் 3 ஆம் பாகத்திற்கு லீடாக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் படம் வசூலில் உலகளவில் ரூ.400 கோடிக்கும் வசூலைப் பெற்று சாதனைப் படைத்தது.
மேலும் விக்ரம் படத்தின் வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜூக்கு கார், உதவி இயக்குநர்களுக்கு பைக், நடிகர் சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்ச் என பரிசு வழங்கி மகிழ்ச்சிக்குள்ளாக்கினார் கமல்ஹாசன். இந்நிலையில் விக்ரம் படம் வெளியாகி இன்றோடு 100 நாட்கள் ஆகியுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக நேற்று இரண்டு போஸ்டர்கள் வெளியானது. இன்று நடிகர் கமல்ஹாசன் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் படம் 100வது நாளை எட்டியிருக்கிறது..மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகளை தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் விக்ரம் படத்தில் நடித்த நடிகை காயத்ரி இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். கதைப்படி பஹத் ஃபாசில் மனைவியாக வரும் அவர் விஜய் சேதுபதியால் தலை துண்டித்து கொல்லப்படுவார். இதனிடையே காயத்ரியின் பதிவில், ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் இறக்கும் காட்சியில் நடித்தால், அவர்கள் எழுந்து கேமராவைப் பார்த்து புன்னகைப்பதைப் படம் எடுப்பது வழக்கம். அந்த காட்சி வெறும் நடிப்பு என்று பிரபஞ்சத்திற்குச் சொல்வது போலவும், நடிகர் உயிருடன் இருக்கிறார் என்பதை சொல்வது போலவும் அமையும். ஆனால் விக்ரம் படத்தில் எனது காட்சியை படமாக்கும்போது அந்த காட்சியை எடுக்க மறந்து விட்டோம். நீண்ட நேரம் எடுத்ததால், லைட்டிங் அமைப்பையும் நகர்த்த முடியவில்லை. Soooo நாங்க புதுமையா எடுத்துட்டு வந்துட்டோம்.. எல்லாரும் கேட்கறாங்க, உங்க தல எங்க, இங்க பாருங்க டா! என தெரிவித்துள்ளார். அதில் ஒரு போட்டோவில் காயத்ரி தலை துண்டிக்கப்பட்டு இருப்பது போலவும், மற்றொரு போட்டோவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இருப்பது போலவும் உள்ளது. இந்த பதிவு ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.