திருமணமான பெண் என்பதால் சினிமாவில் நடிக்க வாய்ப்பு மறுக்கப்பட்டதாக நடிகை துர்கா வேதனையுடன் தெரிவித்துள்ளார். 


இயக்குநர்‌ வெங்கட் புவன்‌ இயக்கத்தில்‌  குருசோம சுந்தரம், ஶ்ரீதர் மாஸ்டர், நிதீஷ் வீரா,  பீட்டர் ராஜ், துர்கா, ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் “பெல்”. பரணி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ராபர்ட் இசை அமைத்துள்ளார். இயற்கை மருத்துவத்தின்‌ சிறப்புகள்‌ பற்றியும்‌ பழந்தமிழர்களின்‌ மருத்துவம்‌ சார்ந்த கண்டுபிடிப்புகள்‌ பற்றியும்‌ பேசும்‌ படமாக பெல் படம் அமைந்துள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதன்பின், படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து படத்தில் படக்குழுவினர் தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.


அப்போது பேசிய இயக்குனர் வெங்கட் புவன், பல நூறு ஆண்டுகளுக்கு முன்‌ வாழ்ந்த அகஸ்தியர்‌, பாதுகாக்கப்படவேண்டிய 6 ரகசியங்களை தனது நம்பிக்கைக்குரிய 6 சீடர்களுக்குச்‌ சொல்லி கொடுத்ததையும், கட்டளையிட ரகசியங்களைப்‌ பாதுகாப்பதில்‌ நன்மைக்கும்‌ தீமைக்கும்‌ இடையே நடந்த போராட்டமே படத்தின்‌ மையக் கதையாகும்‌ என தெரிவித்துள்ளார். மேலும் காதல்‌, குடும்பம்‌, ஆக்ஷன்‌ என அனைத்து அம்சங்களும்‌ மிகச்‌சரியான விகிதத்தில்‌ கலந்த கலவையாக அமைந்த படமாக பெல்‌ இருக்கும்‌ எனவும் அவர் கூறினார்.


இதனைத் தொடர்ந்து பேசிய நடிகை துர்கா, “சினிமாவில் நடிக்க வேண்டும் என்று பலமுறை முயன்றிருக்கிறேன். ஆனால் நான் திருமணமான பெண் என்று சொல்லி வாய்ப்பு தர மறுத்தார்கள். பெல் படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வாழ்வில் மறக்க முடியாது.  இந்த படத்தில் சீனியர்களுடன் இணைந்து நான் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் இப்படத்தில் வேறு கேரக்டருக்கு தான் ஆடிஷன் செய்தேன். ஆனால் ஹீரோயின் கேரக்டர் தந்தார்கள்.  ஆடிஷன் இல்லாமல்தான் நடித்தேன். இந்தப் படத்தில் நான் நடிக்க காரணமாக இருந்த இயக்குநர், தயாரிப்பாளர், உடன் நடித்தவர்கள்,டெக்னீஷியன்கள்  என்னை நடிக்க அனுமதித்த என் கணவர் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.