வெள்ளித்திரையில் அறிமுகமாகி வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து தற்போது சின்னத்திரையில் நடித்துக்கொண்டு வரும் நடிகை தேவயானி. 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் மிகவும் செல்லமான ஒரு நடிகையாக வலம் வந்தவர். 1995ஆம் ஆண்டு வெளியான 'தொட்டாச்சிணுங்கி' படம் மூலம் அறிமுகமான தேவயானிக்கு அஜித் ஜோடியாக நடித்த 'காதல் கோட்டை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 


 



வெள்ளித்திரை டூ சின்னத்திரை : 


காதல் கோட்டை படத்தில் கமலியாக வாழ்ந்த தேவயானியை அவ்வளவு எளிதில் யாராலும் கடந்து விட முடியாது. ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக அனைத்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்த தேவயானி, குடும்பம், குழந்தை என ஆனா பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். பின்னர் சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்த தேவயானிக்கு சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' தொடர் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. சில ஆண்டுகளாக நிகழ்ச்சிகளின் நடுவராகவும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். 


தேவயானியின் கடவுள் நம்பிக்கை: 


சமீபத்தில் நேர்க்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தேவயானி தனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் என குறிப்பிட்டு இருந்தார். மஹாலக்ஷ்மி, காளிகாம்பாள் என அம்மன் தெய்வங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது. தினசரி வாழ்க்கையில் ஏதாவது ஒரு அதிசயம் நடந்து கொண்டு தானே இருக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் பல கடினமான தருணங்களில் அம்மன் எனக்கு ஆதரவாக இருந்துள்ளார். 


 



பிரசவ வலி :


நாங்கள் எங்களுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் எடுத்த இரண்டாவது படத்தை வெளியிடும் போது பயங்கரமான பிரச்சினைகளை அனுபவித்தோம். ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் அவர்களுடைய படம் வெளியிடும்போது அது பிரசவ வலி போன்ற வேதனையைக் கொடுக்கும் என்பார்கள். எங்கிருந்து எப்படி பிரச்சினை வரும் என்பதை சொல்லவே முடியாது. அது போன்ற ஒரு வலியை நாங்களும் அனுபவித்தோம்.  


அம்மா செய்த அதிசயம் : 


'திருமதி தமிழ்' படத்தை என்னுடைய கணவர் தான் இயக்கினார் நான் தான் அப்படத்தை தயாரித்தேன். ஒரு கட்டத்தில் நாங்கள் படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் எங்களுக்கு பணம் இல்லாமல் நாங்கள் சிரமப்படும்போது அந்த அம்மாவிடம் தான் நான் வேண்டிக்கொண்டேன்.


“எங்களுக்கு இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுக்க தைரியம் இல்லை. நீ தான் எங்களுக்கு இந்த வழியைக் காட்டினாய். அதனால் நீ தான் இதில் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும். எங்களை கைவிட்டு விடாதே  அம்மா” என மனதார வேண்டிக் கொண்டேன். அந்த அம்மா தான் எங்களுக்கு அந்த சமயத்தில் பேங்க் லோனாக ஏற்பாடு செய்து கொடுத்து எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் படத்தை மிகவும் ஸ்மூத்தாக ரிலீஸ் செய்ய உதவி செய்தார்” என மிகவும் உருக்கமாகப் பேசி உள்ளார் நடிகை தேவயானி.  


முன்னதாக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் செம்பருத்தி பாத்திரத்தில் அம்மனாக நடித்திருந்த தேவயானி, தற்போது மாரி சீரியலில் நடித்து வருகிறார்.