கோலங்கள் சீரியலுக்குப் பின்னர் தற்போது ஜீ தமிழில் புதுப்புது அர்த்தங்கள் படத்தில் நடிப்பது தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகை தேவயானி தெரிவித்துள்ளார்.


அதனால், மீண்டும் நடிகர் அபிஷேக்குடன் இணைந்து நடித்த நாடகம் இன்னொரு தொடக்கம் என்று தேவயானி தெரிவித்துள்ளார்.


1990, 2000 ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகையாக வளம் வந்தவர் தேவயானி. அஜித் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற காதல் கோட்டையில், நடித்த இவருக்கு அடுத்து அனைத்துமே வெற்றிக்கோட்டை தான். விஜய், அஜித், சரத்குமார், மம்முட்டி, சத்யராஜ், பிரபு என அப்போது முன்னணி நடிகர்களாக திகழ்ந்த அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்தார்.


90ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த சூர்ய வம்சம், பிரெண்ட்ஸ் போன்ற படங்களில் முக்கிய நாயகி தேவயானி தான். குடும்பப்பாங்கான கதாப்பாத்திரங்களில் நடித்து ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் பெண்ணாகவும் மாறினார் தேவயானி.


நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் உள்ளிட்ட சில படங்களில் பணியாற்றிய போது இயக்குநர் ராஜகுமாரனுக்கும், தேவயானிக்கும் இடையே காதல் மலர்ந்ததை அடுத்து 2001 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் கமிட்டான நியூ போன்ற சில படங்களில் நடித்தார் தேவயானி. அதன் பிறகு சன் டிவியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பான கோலங்கள் என்ற நெடுந்தொடரின் மூலம், திரையரங்கத்தில் இருந்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் நுழைந்தார் தேவயானி.




சீரியல் பெரும் ஹிட்டானது. தேவயானி தங்கள் குடும்பப் பெண்ணாக பார்க்கத் தொடங்கினார்கள் பெண்கள். தேவயானி என்ற பெயரே மாறி அபி என்ற பெயர் மக்கள் மனதில் பதிந்தது. அதன் அலைகள், மஞ்சள் மகிமை உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். 


தற்போது அவர் நடிப்பில் புதுப்புது அர்த்தங்கள் என்ற நாடகம் 2021 முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில் தமிழ் திரைப்பட நடிகை தேவயானி, அபிஷேக் சங்கர், வி.ஜே. பார்வதி, நியாஸ் மற்றும் மேடைப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ. லியோனி ஆகியோர் நடிக்கின்றார்கள். இத்தொடர் மாமியார்-மருமகளின் பாசபந்தத்தை சொல்லும் தொடர் ஆகும். இதில் மறுமணம் பற்றிய சமூகப் பார்வை தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தேவயானி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


அதுபோல் தான் நடித்த படங்களிலேயே தனக்கு வாழ்வு கொடுத்த படம் காதல்கோட்டை படம். அதனால் அந்தப் படமும் கமலி கதாபாத்திரமும் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானது என்று அவர் கூறியுள்ளார்.


மேலும் தனது மகள்கள் இருவருக்கும் சினிமா ஆசையில்லை என்றும். அவர்களுக்கு குறிப்பாக மூத்த மகள் இனியாவுக்கு இசை மீது ஆர்வம் அதிகம். அவர்கள் என்னவாக விரும்புகிறார்களோ அதற்கான சுதந்திரம் உண்டு என்றும் தேவயானி கூறினார்.


அந்தியூரை அடுத்த சந்திப்பாளையம் கிராமத்தில் தேவயானி, ராஜ்குமார் தம்பதிக்கு ஒரு பண்ணை வீடும், அதை சுற்றி 5 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது. கிராமமும், விவசாயமும் தேவயானிக்கு பிடித்து விட்டதால் ஊரடங்கு முடிந்த பின்பும் சென்னையை விட அங்கேயே அதிக நாட்கள் வசித்து வருகின்றனர்.