விடுதலை படத்தில் சேத்தனின் நடிப்பை பார்த்து விட்டு  தியேட்டரிலேயே அவரை அடித்ததாக மனைவி தேவர்தர்ஷினி   தெரிவித்துள்ளார். 


விடுதலை படம் 


அசுரன் படத்திற்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் “விடுதலை” படத்தை இயக்கியுள்ளார்.எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. இந்த படத்தில்  கதையின் நாயகனாக சூரியும், போராளியாக வாத்தியார் கேரக்டரில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். மேலும் ஹீரோயினாக பவானி ஸ்ரீயும், முக்கிய கேரக்டரில் சேத்தன்,  கௌதம்மேனன், ராஜீவ்மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 


முன்னதாக முன்னதாக விடுதலை  படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி வெளியானது. விடுதலை படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றுள்ளது.  படம் பார்த்த பலரும் சூரி, விஜய் சேதுபதி நடிப்பை பாராட்டி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதிக்கு அடுத்தப்படியாக ஓசி (Officer In charge) என்னும் கேரக்டரில் நடித்த நடிகர் சேத்தனை பலரும் பாராட்டுவதோடு, கடுமையாக விமர்சித்தும் வருகின்றனர். இதனை அவர் மகிழ்ச்சியாக பல நேர்காணல்களில் தெரிவித்து வருகிறார். குறிப்பாக படத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தும் காட்சியில் முகத்தில் எவ்வித சபலத்தையும் காட்டாமல் ஆணவம் மிகுந்த காவல்துறை அதிகாரியாக மிரட்டியிருந்தார். 


மிரட்டிய சேத்தன்


இதனிடையே ஒரு நேர்காணலில் பேசிய சேத்தன், விடுதலை படத்தில் நடிக்க முதலில் 22 நாட்கள் கூப்பிட்டார்கள். கடைசியில் என்னுடைய காட்சிகள் முடிய 122 நாட்கள் ஆனது. படத்தில் இடம்பெறும் மற்ற நேரங்களில் இருந்த அந்த பொழுதுபோக்கு சம்பவங்கள் பெண்களை நிர்வாணப்படுத்தும் காட்சி எடுக்கும் போது மொத்த செட்டும் அமைதியாகவே இருந்தது. அந்த அளவுக்கு அந்த காட்சியின் வெளிப்பாடு இருந்தது.  


யார் தேவையோ, அவர்களை மட்டுமே அந்த அறையில் இருக்க வெற்றி அனுமதித்தார். படம் பார்த்துவிட்டு நிறைய பேர் போன் செய்து பாராட்டினார்கள். தியேட்டரில் என்னுடைய மனைவி தேவதர்ஷினியும், மகளும் படத்தில் என் கேரக்டரை பார்த்து விட்டு என்னை அடித்தார்கள் என வேடிக்கையாக குறிப்பிட்டார். 


தேவதர்ஷினி பேசுகையில்,  படம் பார்ப்பதற்கு முன்னால் சேத்தனின் கேரக்டர் நெகட்டிவ் ஆக இருக்கும் என தெரியும். ஆனால் இப்படி இருக்கும் என தெரியாது. ஒவ்வொரு காட்சி முடியும் போதும் இவர் தானா இது என நினைக்க தோன்றியது. அந்த கேரக்டர் மேல கோபம் வர வர அதன் வெற்றி எனக்கு புரிந்தது. எனக்கு சேத்தனின் தோற்றத்தை பார்த்ததும் ஹிட்லர் நியாபகம் தான் வந்தது. 


படம் பார்த்துவிட்டு நிறைய பேர் என்னிடம் எப்படி இவருடன் வாழ்கிறீர்கள் என கேட்டார்கள். திரையுலகில் இருப்பவர்கள் கூட “இப்படி ஒரு முகம் அவருக்கு இருக்குன்னு சொல்லாம இருந்துட்டீங்களே”ன்னு சொன்னாங்க என அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.