ராமாயணம், மகாபாரதம் போன்ற புராண கதைகளை படமாக்க வேண்டாம் என பிரபல பாலிவுட் நடிகை தீபிகா சிக்லியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 


இந்திய சினிமாவில் புராண கதைகளை படமாக்குவது என்பது காலம் காலமாக நடைபெற்று வரும் ஒன்று. குறிப்பாக ராமாயணம், மகாபாராதம் போன்ற கதைகளை தொலைக்காட்சி தொடர்களாவும், படமாகவும் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாம் காணலாம். எல்லா மொழிகளிலும் புதிதாக வரும் தொழில்நுட்ப வசதிகளை கொண்டு மீண்டும் மீண்டும் இந்த கதைகள் மெருகூட்டப்படுகிறது. கடந்த ஆண்டு கூட ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன், சயிஃப் அலிகான் என பலரும் நடித்த இப்படம் ராமாயணத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது. 






ஆனால் இப்படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது. குறிப்பாக ராமாயணத்தை எந்த வகையில் அதன் மாண்பை குலைக்க வேண்டுமோ அப்படி எடுத்திருக்கிறார்கள் என தாறுமாறாக ரசிகர்கள் விமர்சித்தனர். ஆனாலும் இப்படம் வசூலை அள்ளியது. இதனைத் தொடர்ந்து ரன்பீர் கபூர், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் ராமாயணம் படம் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொலைக்காட்சிகளிலும் ராமாயணம், மகாபாரதம் போன்ற தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 






இதனிடையே ராமானந்த் சாகர் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் சீதையாக நடித்து பிரபலமானவர் தீபிகா சிக்லியா. இவர் இந்தியில் பல படங்களிலும் தமிழில் சில படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே தீபிகா சிக்லியா ராமாயணத்தை படமாக எடுக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “ஆதிபுருஷ் படத்தில் ராமாயணத்தின் பெருமை சிறுமைப்படுத்தப்பட்டு விட்டது. புதுமையாக காட்ட வேண்டும் என்ற நினைப்பில் ராமாயணத்தின் பெருமையை சீர்குலைக்க முயற்சிக்கிறார்கள். எனவே இந்தியாவின் மிகப்பிரபலமான புராணங்களான ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை படமாக்குவதை கைவிடுங்கள். அதற்கு பதிலாக சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்க்கை வரலாறு, வீர தீர போராட்டம்,தியாகங்களை படமாக எடுக்கலாம் எனவும் தீபிகா சிக்லியா கூறியுள்ளார்.