ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரத்துக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவாகவே பெற்றேன் என நடிகை தீபா சங்கர் தெரிவித்துள்ளார்.


நடிகை தீபா:


சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் நகைச்சுவையில் தனது திறமையை நிரூபித்து வருபவர் தீபா. மாயாண்டி குடும்பத்தார்,வெடிகுண்டு முருகேசன், டாக்டர், கடைக்குட்டி சிங்கம் என ஏகப்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். இவர் நேர்காணல் ஒன்றில் தன்னுடைய வாழ்க்கை பற்றி பல தகவல்களை பகிர்ந்துள்ளார். 


அதில், “எனக்கு கோயில் திருவிழாவில் நடிகர்கள் வேடம் போட்டு டான்ஸ் ஆட வருபவர்களுக்கு கிடைக்கும் கைதட்டல்கள் பார்த்து தான் நடிப்பில் ஈர்ப்பு ஏற்பட்டது. நானும் அவர்களைப் போல டான்ஸ் ஆடினால் கைத்தட்டு கிடைக்கும் போல என நினைத்தேன். அந்த காலக்கட்டத்தில் எனக்கு நண்பர்கள் கிடையாது. அதனால் தனியாக எனக்கு நானே பேசுவேன். ஹாஸ்டலில் இருக்கும்போதும் அப்படித்தான் இருப்பேன். அதன்மூலம் நடிக்க பயிற்சி எடுத்தேன்.


நல்லவேளை யாரும் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவள் என நினைக்கவில்லை. அப்படியாக பயிற்சி பெற்ற நான் நடிக்க வந்து விட்டேன். எனக்கு மெட்டி ஒலியில் வாய்ப்பு கிடைத்தபோது நம்முடைய உடைகள் நாம் தான் தயார் செய்ய வேண்டும். அதையெல்லாம் என் அம்மா தான் செய்து கொடுத்தார். நான் நடித்து விட்டு வந்தவுடன் சாப்பாடு வாங்கி தருவார். 


ஆரம்ப கால சம்பளம்:


மேலும் என்னுடைய நடிப்பு முயற்சி பெரும்பாலும் தோல்வியில் தான் முடிவடைந்தது. அப்பா என் தலையில் நீயே மண் அள்ளி போட்டு விட்டாய் என சத்தம் போட்டார். எங்கள் சாதியில் நடிக்கும் பெண்களை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள். நான் நடிப்பதை சம்மதித்தால் அந்த நபரை நான் திருமணம் செய்து கொள்கிறேன் என சொல்லி தான் திருமணம் செய்தேன். ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரத்துக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட குறைவாகவே பெற்றேன். 


எனது அம்மா கொரோனாவின் போது இறந்து விட்டார். ஆனால் எங்கள் கவலை அடுத்த மாசம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவது என்று தான் இருந்தது. என்னுடைய கையை பிடித்த நிலையில் தான் அம்மாவின் உயிர் போனது. எங்க அம்மா போன பிறகு அவரின் பெட்டியை திறந்து பார்த்தால் அது முழுக்க நான் சின்ன வயதில் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை இருந்தது. எப்ப பார்த்தாலும் அவர் சிடுசிடுவென பேசுவார். அப்போதெல்லாம் நான் கோபப்படுவேன். ஆனால் இப்போது அவர் இல்லாதபோது தான் அருமை புரிகிறது” என தீபா சங்கர் தெரிவித்துள்ளார்.