96 படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கருக்கு, தாலி கட்டுவதுபோல் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் நடிகை கெளரி கிஷன்.


96 


பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி  நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான படம் 96. விஜய் சேதுபதி , த்ரிஷா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்கள். விஜய் சேதுபதியின் இளமைக் கால கதாபாத்திரத்தில் எம்.எஸ் பாஸ்கரின் மகனான ஆதித்யா பாஸ்கரும் த்ரிஷாவின் இளமைக்கால கதாபாத்திரத்தில் நடிகை கெளரி கிஷனும் நடித்திருந்தார்கள். இருவருக்கு 96 படமே முதல் படமாக அமைந்த 96 ரசிகர்களுக்கு நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது. 


 96 படத்தைத் தொடர்ந்து ஆதித்யா பாஸ்கர் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு, கார்த்திக்  சுப்பராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மற்றும் சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியான ரெபல் படத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில் கெளரி கிஷன் விஜய் நடித்த மாஸ்டர், தனுஷின் கர்ணன் படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷ் நடித்த ’அடியே’ படத்தில் நாயகியாக நடித்தார். 


கெளரி இன்ஸ்டாகிராம் பதிவால் பரபரப்பு


கெளரி கிஷன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஆதித்யா பாஸ்கருக்கு தாலி கட்டுவதைப்போல் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து சமூக வலைதளத்தில் அதிர்ச்சியை கிளப்பி இருந்தார்.


இருவருக்கும் திருமணமா என்று ரசிகர்கள் குழப்படைய இந்த புகைப்படம் அவர்கள் இருவரும் இணைந்து தற்போது நடித்திருக்கும் ஹாட் ஸ்பாட் படத்தின் ப்ரோமோஷன் என்று தெரியவந்துள்ளது. 






திட்டம் இரண்டு மற்றும் கடந்த ஆண்டு ஜி.வி பிரகாஷின் அடியே படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் தற்போது இயக்கியுள்ள படம் ஹாட்ஸ்பாட். இப்படத்தில் கெளரி கிஷன் , ஆதித்யா பாஸ்கர், சாண்டி மாஸ்டர் , ஜனனி ஐயர் , அம்மு அபிராமி , கலையரசன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். சதீஷ் ரகுநாதன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.


நான்கு கதைகளைக் கொண்ட இந்தப் படம் சுவாரஸ்யமான திரைக்கதையுடன் எடுக்கப்பட்டிருப்பதாக சிறப்பு திரையிடலைப் பார்த்த விமர்சகர்கள் கருத்து கூறியுள்ளார்கள்.  இப்படம் இன்று 29 மார்ச் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தானும் ஆதித்யா பாஸ்கரும் இணைந்து நடித்துள்ளதை தெரிவிப்பதற்காக கெளரி கிஷன் இந்தப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.