கைதவறி விழுந்த குழந்தை
கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீட்டு கூரையில் கைக் குழந்தை தவறிவிழுந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளானது. அங்கு வசித்தவர்கள் பல முயற்சிகளுக்குப் பிறகு அந்த குழந்தையை மீட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த நிகழ்வு தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது குழந்தையில் தாய் ரம்யா ஒரு கையில் குழந்தையை வைத்திருந்து இன்னொரு கையில் துடைப்படத்தை எடுக்க முயன்ற போது கைதவறி குழந்தை வீட்டு கூரையில் விழுந்ததாக தெரியவந்தது.
அதிர்ஷ்டவசமாக குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டாலும் குழந்தையை கவனமாக பார்த்துக் கொள்ளாதது குறித்து பலவிதமான கருத்துக்கள் சமுக வலைதளங்களில் பகிரப்பட்டன. பிரபல திரைப்பட விமர்சகரான பிரசாந்த் ரங்கசாமி தனது எக்ஸ் தளத்தில் ‘உங்களுக்கு எல்லாம் குழந்தை ஒரு கேடா’ என்று பதிவிட்டிருந்தார்.
மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்ட குழந்தையின் தாய்
கோயம்புத்தூர் காரமடையை சொந்த ஊராக கொண்டவர்கள் வெங்கடேசன் மற்றும் ரம்யா தம்பதியினர். இவர்கள் சென்னையில் திருமுல்லையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்கள். இந்த நிகழ்வு நடந்தைத் தொடர்ந்து தங்களது சொந்த ஊரான காரமடைக்குச் சென்று தங்கியுள்ளார்கள். இப்படியான நிலையில் வீட்டில் அனைவரும் வெளியே சென்று திரும்பியபோது ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட தகவல் நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
காவல் துறை விசாரணை மேற்கொண்டதில் குழந்தை விழுந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக வந்த விமர்சனங்களால் மன உளைச்சல் அதிகமாகி ரம்யா தற்கொலை செய்துகொண்டுள்ளது தெரியவந்தது. ஆபத்தான நிலையில் இருந்த குழந்தையை மீட்டு வெறும் விமர்சனங்களால் ஒரு உயிரை எடுத்துவிட்டுள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ரம்யாவின் தற்கொலையை குறிப்பிட்டு பாடகி சின்மயி சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி உட்பட பலரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இப்போ உங்களுக்கு மகிழ்ச்சியா ?
தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட சின்மயி “ இந்த விவகாரத்தில் குழந்தையின் பெற்றோர்களை விமர்சித்த பிரசாந்த் உள்ளிட்டவர்கள் இனி மகிழ்ச்சியாக கொண்டாடலாம் . இப்போது அது தாயில்லா குழந்தை” என்று பதிவிட்டுள்ளார்.
எதற்கெடுத்தாலும் பொங்கும் நெட்டிசன்கள்
ஒரு நிகழ்வு பற்றி எந்த வித பின்னணியும் தெரிந்துகொள்ளாமல் சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோக்களை மட்டும் வைத்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை திணிக்கும் போக்கு தொடர்ச்சியாக நடந்துகொண்டு வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் இப்படியான விபத்துக்கள் சில நேரங்களில் யார் கட்டுப்பாட்டிலும் இருப்பவை அல்ல என்பதை கருத்திக் கொள்ளாமல், தங்கள் சமூக அக்கறையை கோபத்தை வாய்க்கு வந்த வார்த்தைகளால் வெளிப்படுத்துவது ஒரு பெண்ணை தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டியுள்ள நிகழ்வு இணையச் சமூகம் எந்த மாதிரியான மனநிலையில் இருக்கிறது என்கிற கேள்வியையே எழுப்புகிறது.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும்.
மாநில உதவி மையம் :104
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028. தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)