90-களில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சார்மிளா. தமிழ் சினிமாவில் பல படங்களில் குணச்சித்திர நடிகையாகவும் நடித்திருக்கிறார். தனது இளம் பருவத்தில் சினிமா துறையில் தான் சந்தித்த மோசமான அனுபவங்களையும் , சிறு வயதில்  தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்தும் ஷகிலா உடனான நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக பகிர்ந்திருக்கிறார் சார்மிளா. 






அதில் ”எனக்கு என் அப்பா என்னுடன் ஷூட்டிங் வருவாங்க.கடைசியா என் அப்பாக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் என்னுடைய உதவியாளருடன் நான் படப்பிடிப்புக்கு போயிட்டு இருந்தேன். அந்த சமயத்தில்தான் அட்ஜெஸ்மெண்டுங்குற ஒரு விஷயம் இருப்பதே எனக்கு தெரியும். என்னிடம் வந்து கேட்கும்பொழுது எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை அப்படினு சொல்லியிருக்கேன். எனது தோழிகள் சிலரிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறேன். அட்ஜெஸ்மெண்ட் போயிட்டு வந்து , இரவு எப்படி நிம்மதியாக தூங்குறீங்க. முன் பின்  தெரியாத ஆண் அல்லவா உங்களைத்தொடுவது! அதேபோல ஆண்களிடமும் கேட்டிருக்கிறேன். நாளைக்கு நீங்க உங்க மனைவியுடன் வெளியில் போயிட்டு வரும்பொழுது ,உங்களுடன் அட்ஜெஸ்மெண்ட் செய்த பெண் பார்த்தால், உங்கள் மனைவியை பார்த்து எவ்வளவு கேவலமாக சிரிப்பா? ஏன் அந்த பெண்ணுக்கு இவ்வளவு பெரிய அசிங்கத்தை வாங்கி தற்றீங்க. இரண்டு மூன்று பேரிடம் இதை கேட்டிருக்கிறேன்” என்றார்.


”அதன் பிறகு அப்படியான பழக்கத்தையே விட்டுருக்காங்க. என்னை அதன் பிறகு சகோதரினு கூப்பிட ஆரம்பிச்சிட்டாங்க. அட்ஜெஸ்மெண்ட்டில் இருந்து தப்பிக்க , வீட்டில் அடைக்கலம் கொடுத்து நான் தப்பிக்க வைத்திருக்கிறேன். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தண்டனை அதிகமாக வேண்டும். அரபு நாடுகளில் இருப்பதுபோல நடு ரோட்டில் நிற்க வைத்து கல்லைக்கொண்டு அடிக்க வேண்டும்.மோசமான தண்டனை கொடுக்க வேண்டும். அந்த மாதிரி நோக்கத்துல எப்படி குழந்தையை பார்க்க முடியுது. அசிங்கப்படுத்தி தண்டனை கொடுக்க வேண்டும். என்னுடைய பள்ளி பருவத்தில் 7 வது 8-வது படித்துக்கொண்டிருந்த சமயம். அப்போது வேலை செய்யும் நபர் ஒருவர்  என்னை தவறாக தொட்டுவிட்டு வேகமாக சென்றுவிட்டார். அவரை திரும்பி பார்த்தபொழுது என்னையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தார். எனது தோழிகளிடம் நான் சொன்னேன். எனது ஆசிரியையிடம் சொன்னபொழுது அவர்கள் நீ ட்ரெஸ்ஸை ஒழுங்கா போட்டியா இல்லையான்னு என்னைத்தான் திட்டினாங்க. கடைசியில் அங்கு படிக்கும் மாணவரின் தந்தைதான் அவர்” என தனது கசப்பான அனுபவங்களை பகிர்ந்தார் சார்மிளா