பிரபல மராத்திய நடிகை பாக்யஸ்ரீ மோட்டேவின் சகோதரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவைச் சேர்ந்த பாக்யஸ்ரீ மோட்டே 2011 ஆம் ஆண்டு வெளியான Shodhu Kuthe படத்தின் மூலம் மராத்தி சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து  Mumbai Mirror,  Kaay Re Rascalaa, Patil படத்தில் நடித்த அவருக்கு தெலுங்கில் 2019 ஆம் அண்டு வெளியான சிகாட்டி காடிலோ சித்தகொடுடு படம் திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து இந்தி,மராத்தி ஆகிய மொழிகளில் நடித்து வரும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். 


இதனிடையே நடிகை பாக்யஸ்ரீ மோட்டேவின் சகோதரி மது மார்கண்டேயா சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். புனேவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தரப்பில் அளித்த தகவலின்படி, மது மார்கண்டேயா பேக்கரி ஒன்றை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் தனது வியாபாரத்தை அதிகரிக்கும் வகையில், தனது தோழியுடன் இடம் ஒன்றை பார்க்கச் சென்றுள்ளார். 


அப்போது மதுவுக்கு திடீரென மயக்கம் வந்து சுருண்டு விழுந்ததாகவும், அவரை தோழி உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதித்த போது மது இறந்து விட்டதாகவும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது முகத்தில் காயங்கள் காணப்பட்டதாக கூறப்படுவதால் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 


இதனிடையே நேற்றைய தினம் இன்ஸ்டாகிராமில் பாக்யஸ்ரீ மோட்டே தனது சகோதரி மது மார்கண்டேயா குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனது சகோதரி இல்லாமல் முற்றிலும் தொலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், “என் அன்பு சகோதரி இந்த உலகத்தில் இருந்து விடைபெறுகிறாள். என் அம்மா, சகோதரி, நண்பர், நம்பிக்கையாளர் மற்றும் என்ன இல்லை?  அவள் என் அடித்தளம், என் முழு இருப்பின் மையம் மது தான் என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.


அதேசமயம், “நீ இல்லாத இந்த வாழ்க்கையில்நான் என்ன செய்வது? இப்படியான சூழலை எதிர்கொள்ள நீங்கள் எனக்கு ஒருபோதும் சொல்லி கொடுக்கவில்லை. மரணம் உண்மைதான். ஆனால் நான் உன்னை விடமாட்டேன்” என பாக்யஸ்ரீ மோட்டே தெரிவித்துள்ளார்.