அனுஷ்கா ஷெட்டி


தமிழ் , தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் கலக்கியவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி. சூர்யாவுடன் சிங்கம், விஜயுடன் வேட்டைக்காரன், ரஜினியுடன் லிங்கா , அஜித்துடன் என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதுதவிர்த்து அவர் சோலோவாக நடித்த அருந்ததி போன்ற படங்களும் சூப்பர் ஹிட் அடித்தன. த்ரிஷா, நயன்தாரா போல் அனுஷ்காவுக்கு என பெருவாரியான ரசிகர்கள் உள்ளார்கள். சமீப காலத்தில் அனுஷ்கா பெரியளவில் படங்களில் நடிக்கவில்லை . கடந்த ஆண்டு தெலுங்கில் அவர் நடித்த மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி ஓரளவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றது. 


அனுஷ்கா ஷெட்டிக்கு இருக்கும் வித்தியாசமான பாதிப்பு


 சமீப காலங்களில் நட்சத்திரங்கள் தங்களுக்கு இருக்கும் உடல் ரீதியான நோய்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார்கள்.  நடிகை சமந்தா தனக்கு மையோசிடிஸ் என்கிற தசை அழற்சி பாதிப்பு இருப்பதாக தெரிவித்தார் . மலையாள் நடிகர் தனக்கு ஏடிஎச்டி பாதிப்பு இருப்பது கண்டறியப் பட்டிருப்பதாக சமீபத்தில் தெரிவித்தார். அதே போல் நடிகை அனுஷ்காவுக்கும் ஒரு வித்தியாசமான பாதிப்பு இருக்கிறது. 


அனுஷ்காவால் தனது சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது என்பது தான் அவருக்கு இருக்கும் அரிய வகை பாதிப்பு. கடந்த ஆண்டு அனுஷ்கா அளித்த நேர்காணலில் அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார். அதாவது தன்னைச் சுற்றி ஏதாவது காமெடியாக நடந்து அனுஷ்கா சிரிக்கத் தொடங்கிவிட்டால் அனுஷ்காவால் அதை கட்டுப்படுத்தவே முடியாதாம். தொடர்ச்சியாக 15 முதல் 20 நிமிடங்கள் வரை சிரித்து ஓயந்தப் பின்பே அவர் அமைதியாவாராம். படப்பிடிப்பின் போது அவர் அப்படி சிரிக்கத் தொடங்கினால் மற்றவர்கள் எல்லாம் பிரேக் எடுத்துக் கொண்டு டீ காஃபி சாப்பிட்டு வந்து பின் அவருக்கு நன்றி சொல்வார்களாம். அதுவும் காமெடி படம் என்றால் தரையில் உருண்டு புரண்டு சிரித்துவிடுவார் என்று அனுஷ்கா இந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். 


கத்தனார்






தற்போது அனுஷ்கா ஷெட்டி மலையாளத்தில் கத்தனார் என்கிற ஹாரர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் மூலம் அவர் மலையாளத்தில் அறிமுகமாக இருக்கிறார் . ஸ்ரீ கோகுலம் மூவிஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. ரோஜின் தாமஸ் இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் , மலையாளம் , கன்னடம் , தெலுங்கு , பெங்காலி , இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.