கடந்த 2020ஆம் ஆண்டில் வெளியான `மணியறையிலே அஷோகன்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் அனுபமா பரமேஸ்வரன் சிறு கிராமம் ஒன்றில் ஆண் ஒருவர் மீது அவருக்கே தெரியாமல் காதல் கொண்டிருக்கும் இளம்பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அந்த ஆணின் முகத்தைத் தன்னுடைய நோட் புக்கில் பல முறை அனுபமாவின் கதாபாத்திரம் வரைந்து கொண்டே இருக்க, இறுதியாக அவர் வரைந்த ஒரு பேப்பர் குளத்தில் விழுந்து இறுதியாக அவர் விரும்பிய அஷோகனிடம் சென்று சேர்கிறது. இந்தப் படத்தில் காதல் முக்கியப் புள்ளியாகக் கருதப்பட்டிருந்தாலும், இளம்பெண் ஒருவரின் வரையும் திறமையைப் பாராட்ட படம் மறந்து விடுகிறது. இந்நிலையில் இந்தக் கதாபாத்திரத்தில் நடித்த அனுபமா பரமேஸ்வரன் தான் மிகச் சிறந்த ஓவியக் கலைஞர் என்பதைக் கடந்த சில ஆண்டுகளாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிரூபித்து வருகிறார். 


அனுபமா பரமேஸ்வரன் நிறங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பரிசோதனைகளால் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை நிரப்பி வருகிறார். கடந்த கொரோனா பெருந்தொற்றுக் கால ஊரடங்கின் போது, பல்வேறு ஓவியங்களைப் பதிவிட்டிருந்தார் நடிகை அனுபமா. தொடர்ந்து The Curlien என்ற பெயரில் கலைப் படைப்புகளாக அவர் உருவாக்கும் ஓவியங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார் அனுபமா.



சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தப் பக்கத்தைக் குறித்து கூறியுள்ளார் அனுபமா. அதில் அவர், `The Curlien பக்கத்தை ஒரு மனவேதனைக் காலத்தில் தொடங்கினேன். அதுவே தற்போது என் வாழ்வின் மிகச் சிறந்த ஒன்றாக மாறியுள்ளது. `ஃபீனிக்ஸ் பறவையைப் போல எரிந்து மீண்டும் உயிர்ப்போடு பறக்க வேண்டும்’ என்பதை உணர்கிறேன்.. நான் ஓவியராக இருந்ததில்லை.. இப்போதும் ஓவியர் இல்லை. ஆனால் என்னை நம்புங்கள். ஓவியங்களை விட வேறு எதுவும் எனக்கு ஓய்வு அளித்தது இல்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.






தொடர்ந்து அவர், `என் மனதை ரிலாக்ஸ் செய்வதற்காக என் கைகளில் வண்ணங்களைக் கொடுத்து, அவற்றைப் பயன்படுத்த சொன்ன சாய் பல்லவிக்கு என்னுடைய நன்றிகள்.. எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்த வசந்திற்கு நன்றி.. இது ஒரு காலகட்டம்.. நான் என் மீதே பெருமை கொள்ளும் காலகட்டம்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். 


கடந்த 2015ஆம் ஆண்டு, `பிரேமம்’ திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை அனுபமா பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார்.