சினிமாவில் பட வாய்ப்புகாக சிலர் தன்னை தவறான பாதைக்கு அழைத்தனர் என பிரபல நடிகை அனு இம்மானுவேல் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சினிமாவில் புகழில் இருக்கும் பிரபலங்களும் சரி, புதிதாக வாய்ப்பு கேட்டு வருபவர்களும் சரி பாலியல் ரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார். இதுதொடர்பாக காலம் காலமாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக மீ டூ இயக்கம் மூலம் வெளிப்படையாக பேசப்படுகிறது. இதில் பெண் பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த மோசமான சம்பவங்களை தெரிவிப்பது ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைகின்றது. 


அந்த வகையில் நடிகை அனு இம்மானுவேலும் தனக்கு நேர்ந்த மோசமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மலையாளத்தில் 2011 ஆம் ஆண்டு ஸ்வப்ன சஞ்சாரி என்னும் படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனு இம்மானுவேல். தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதே ஆண்டில் மஜ்னு படத்தின் மூலம் தெலுங்கிலும் நடித்த அனு, 2017 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்தார். 


இதன் பின்னர் 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்த  அனுவுக்கு அப்படம் ஏகப்பட்ட ரசிகர்களைப் பெற்றுக் கொடுத்தது.  அந்த படத்தில் இடம் பெற்ற ‘காந்த கண்ணழகி’ பாடல் குழந்தைகள் வரை அனு இம்மானுவேலை அடையாளம் காட்டியது என்றே சொல்லலாம். ஆனாலும் அவருக்கு தமிழில் அடுத்தடுத்த படங்கள் அமையவில்லை. அதேசமயம் தெலுங்கில் அனு இம்மானுவேல் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தில் நடிக்கிறார். 


இந்த நிலையில், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு சிலர் தன்னை அணுகினார்கள் என்றும், அவர்களை என் குடும்பத்தினர் உதவியுடன் தைரியமாக எதிர்கொண்டேன் என்றும் அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற பிரச்சினைகளை குடும்பத்தினர் உதவியுடன் எதிர்கொள்வதே சிறந்தது. பெண்களை முன்னேற விடாமல் தடுப்பது இவர்களை போன்றவர்கள் தான் என்பதால் துணிச்சலாக போராட வேண்டும் எனவும் சமீபத்திய நேர்காணலில் அனு இம்மானுவேல் தெரிவித்துள்ளார்.