நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் எனக்கும் பரஸ்பர மரியாதையுடன் கூடிய நட்பு உள்ளது என நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார். 


தெலுங்கில் கிருஷ்ணா சைதன்யா இயக்கத்தில் விஸ்வாக் சென், அஞ்சலி, நேஹா ஷெட்டி, நாசர், சாய் குமார் உள்ளிட்ட பலரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் “கேங்க் ஆஃப் கோதாவரி”. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் ஏற்கனவே பெரும் வரவேற்பை பெற்றது. 






இதனிடையே நேற்று முன்தினம் கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரபல தெலுங்கு சூப்பர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு மட்டுமல்லாமல் சர்ச்சையாகவும் மாற்றினார். மேடையில் இறுதியாக அனைவரும் நின்று கொண்டிருக்கும் நிலையில் பாலகிருஷ்ணா இரண்டு முறை அஞ்சலியை நகர்ந்து நிற்குமாறு சைகை காட்டினார். அவரும் சில அடிகள் நகர்ந்த நிலையில் சட்டென கடுப்பாகி அஞ்சலியை தள்ளி விடுவது போல நடந்து கொண்டார். 


சற்றும் எதிர்பாராத அஞ்சலி பாலகிருஷ்ணாவின் இந்த செயலை கண்டு கோபப்பட்டாமல் சிரித்து சமாளித்து விட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. பாலைய்யா பெண்களை அவமதிக்கும் செயலை தவிர்க்க வேண்டும் என இணையவாசிகள் தெரிவித்தனர். இப்படியான நிலையில் நடிகை அஞ்சலி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். 






அதில், “கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணா அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணாவுக்கும் எனக்கும் எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் கூடிய நட்பு உள்ளது. அதனை தொடர்ந்து பேணி வருகிறோம் என்பதையும், நீண்ட காலமாக நட்பைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அவருடன் மேடையை பகிர்ந்து கொண்டது அருமை” என அஞ்சலி கூறியுள்ளார். மேலும் அந்த வீடியோவில் பாலைய்யாவுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள் இடம் பெற்றுள்ளது.