நடிகர் அஜித்தின் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை நடிகை அனிதா ரத்னம் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 


கடந்த 2000 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ், மம்முட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களின் பேவரைட்டாக இன்றும் உள்ளது. இந்த படத்தில் ஒரு குடும்பத்தின் மதிப்பு, நாட்டோட மதிப்பு என இரண்டு விஷயங்களையும் இப்படத்தில் பேசியிருந்ததால் பெரிய வரவேற்பு கிடைத்தது. 


இந்த படமே முதலில் வேறு மாதிரியாக இருந்துள்ளது. அதாவது ஐஸ்வர்யாராய் கேரக்டரில் மஞ்சு வாரியரும், தபுவுக்கு பதிலா சௌந்தர்யா, பார்த்திபன் நடிக்க வேண்டியது என பேட்டி ஒன்றில் ராஜீவ் மேனன் தெரிவித்திருந்தார். அதேபோல் அஜித்தின் கேரக்டரில் முதலில் பிரசாந்தை தான் அணுகினார்கள். இந்த படத்தில் அஜித்தின் அக்கா கேரக்டரில் நடிகை அனிதா ரத்னம் நடித்திருந்தார். 






அவர் நேர்காணல் ஒன்றில்  படத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்றை தெரிவித்துள்ளார். கதைப்படி பணக்கார வீட்டு பையனாக வரும் அஜித் சினிமா மீதான ஆசையில் குடும்ப பிசினஸை கவனிக்காமல் இருப்பார். இதனால் குடும்பத்தினர் அவர் மீது கோபத்தில் இருப்பார்கள்.  செட்டிநாடு அரண்மனையில் இதற்கான ஷூட்டிங் நடந்தது. அப்போது எங்களுக்குள் நடந்த விவாதத்தின் போது அஜித் வாலி படத்திற்காக காத்திருப்பதாகவும், கண்டிப்பாக அப்படம் வெற்றி பெற்று என்னோட கேரியரே மாறப்போகுது பாருங்க என தெரிவித்தார். 


படத்தில் அஜித்தை நான் வாடா, டேய் போன்ற வார்த்தைகளோடு திட்டுவது போல ஒரு காட்சி இருக்கும். அக்கா தம்பியை திட்டுவது போல தான் அந்த வசனம் இருந்தது. நான் டப்பிங் எல்லாம்  முடிச்சிட்டு அமெரிக்கா போய்ட்டேன். அதன்பின்  வாலி வெளியாகி சூப்பர்ஹிட் ஆக கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தை தயாரிப்பாளர், விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டியுள்ளார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சியை குறிப்பிட்டு எப்படி அஜித்தை இவர்கள் இப்படி திட்ட முடியும் அதனால் இந்த சீனை நீக்குங்கள் என தெரிவித்துள்ளார்கள். அதேபோல் அஜித், ஐஸ்வர்யாவுக்கு இன்னொரு பாடல் வைக்க வேண்டும் என தெரிவித்து கதையை  மாற்றி விட்டார்கள்


அதனால் திரும்ப நான் வந்து டப்பிங் பேச வேண்டிய நிலைமை ஏற்பட்டது. நீங்கள் உற்று நோக்கினால் அதில் என் தம்பி என வசனம் வரும். லிப் சிங் ஆகிருக்காது. கடைசியில் படத்தில் அந்த சீன் இடம் பெறவில்லை. அதன்பிறகு தான் ஸ்ரீவித்யா குடும்பத்தில் வருபவராக நடித்திருப்பேன். இதற்காக ராஜீவ் மேனன் என்னிடம் வருத்தப்பட்டார். உங்களை அறிமுகப்படுத்தி விட்டு இப்படி நடந்துடுச்சேன்னு ஃபீல் பண்ணாரு என தெரிவித்துள்ளார். அனிதா ரத்னம் பாய்ஸ் படத்தில் ஜெனிலியாவின் அம்மாவாக நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.