என்ன உடை அணிந்தாலும் தவறாக பேசுகிறார்கள் என நடிகை அனிகா சுரேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார். 


கடந்த 2007 ஆம் ஆண்டு  மலையாளத்தில் வெளியான சோட்டா மும்பை படம் மூலம் தனது 3வது வயதில் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் அனிகா சுரேந்திரன்.


இவர் கத தடருன்னு, ஃபோர் பிரண்ட்ஸ், ரேஸ், 5 சுந்தரிகள், நீலகாஷம் பச்சைக்கடல் சிவப்பு பூமி, நயனா, ஒன்னும் மிண்டாதே என தொடர்ச்சியாக பல மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இவரை 2014 ஆம் ஆண்டு அஜித் நடித்த என்னை அறிந்தால் படம் மூலம் கௌதம் மேனன் தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தார். 


அப்படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார். தொடர்ந்து மிருதன், நானும் ரௌடி தான், மாமனிதன்,விஸ்வாசம் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். அஜித்துடன் 2 படங்களில் அவரது மகளாக நடித்த அனிகாவை நிஜமாகவே அஜித்தின் மகள் என நினைத்தவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு இருவருக்குமான அந்த அப்பா - மகள் உறவு ஸ்கீரினில் ரசிகர்களை கவர்ந்தது. அனிகா கடந்த ஆண்டு தெலுங்கில் புட்ட பொம்மா என்ற படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார். 


இடையிடையே சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்த பதிவுகளுக்கு பலரும் தாறுமாறாக கமெண்டுகளை பதிவிடுவது வழக்கம். இப்படியான நிலையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அனிகா சுரேந்திரன் ஆடை பதிவுகள் குறித்து வரும் மோசமான கமெண்டுகள் பற்றி பதிலளித்துள்ளார்.


அதில், “சினிமாவில் இருக்கும் பெண்கள் பெரிய அளவில் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்கிறார்கள். கவர்ச்சியாக உடை அணிவது என்பது என்னுடைய தனிப்பட்ட விஷயம்.


எனக்கு ஸ்டைலாக இருப்பது பிடிக்கும். விமர்சனத்தை வந்து போகும். இது வாழ்க்கையில் ஒரு பகுதி தான். என்ன உடை அணிந்தாலும் தவறாக பேசுகிறார்கள். இதுபோன்ற கருத்துகள் என்னை மிகவும் பாதிக்கும். நானும் ஒரு மனுஷி தான்” என கூறியுள்ளார். 


அடுத்ததாக தமிழில் அனிகா சுரேந்திரன் நடிப்பில் “பிடி சார்” படம் வெளியாகவுள்ளது. ஹிப் ஹாப் ஆதி, காஷ்மீரா பர்தேசி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். மேலும் தனுஷ் இயக்கும் “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்திலும் அனிகா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.