கான் திரைப்பட விழா 2024


பிரான்ஸ் நாட்டில் 1946 ஆம் ஆண்டு முதலாக வருடந்தோறும் நடந்து வரும் நிகழ்வு கான் திரைப்பட விழா. உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்கள் மற்றும் திரைக்கலைஞர்களின் கனவாக இந்த விருது நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்தாண்டு கான் திரைப்பட விழா மே 14ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெற்றது. பல்வேறு திரைப்படங்கள் இந்த விழாவில் பல கெளரவ விருதுகளுக்கு போட்டியிட்டன. இந்திய திரைத்துறை சார்பாக முன்னணி பாலிவுட் நடிகர் நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் கந்துகொண்டார்கள். 


விருது வென்ற இந்திய படைப்பாளிகள்


இந்த ஆண்டு கான் திரைப்பட விழாவைப் பொறுத்தவரை பல்வேறு இந்தியக் கலைஞர்கள் பெருமைமிக்க விருதுகளை வென்றுள்ளார்கள். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனுக்கு பியர் அசிங்யு விருது வழங்கி கெளரவித்தது கான் திரைப்பட விழா. மேலும் பாயல் கபாடியா இயக்கிய All We Imagine As Light படம் இத்திரைப்பட விழாவின் இரண்டாம் உயரிய விருதான கிராண்ட் ப்ரிக்ஸ் விருதினை வென்றது. மேலும் சிந்தாந்த் எஸ் நாயக் இயக்கிய ‘சன்ஃபிளவர்ஸ்’ என்கிற குறும்படம் சிறந்த குறும்படத்திற்கான விருதினை வென்றுள்ளது. இவர்களுடம் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றுள்ளார் இந்தியாவைச் சேர்ந்த அனசுயா சென்குப்தா.


யார் இந்த அனாசுயா செங்குப்தா


மும்பையில் ப்ரோடக்‌ஷன் டிசைனராக இருந்து வரும் அனசுயா சென்குப்தா நடிப்பை பின்புலமாகக் கொண்டவர் இல்லை. ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற இவருக்கு பத்திரிகையாளர் ஆகவேண்டும் என்பதே கனவாக இருந்துள்ளது. இந்தியில் ஒரு சில படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்த அனசுயா, கான்ஸ்தாந்தீன் போஜோனோவ் என்கிற பல்கேரிய இயக்குநர் இயக்கிய “ தி ஷேம்லெஸ்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனசுயா சென்குப்தா. இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு கான் திரைப்பட விழாவில் வழங்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான கான் விருதினைப் பெறும் முதல் இந்தியப் பெண் அனசுயா செங்குப்தா என்பது குறிப்பிடத் தக்கது. அனசுயா செங்குப்தாவுக்கு மோகன்லால் உள்ளிட்ட இந்தியத் திரையுலக பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.