சமீபத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களின் ஃபேவரைட் ஐஸ்வர்யா ராஜேஷ்
சிறிய வேடங்களில் நடித்து வந்த நிலையில் பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நிலையான ஹீரோயினாக மாறினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த படம் அவருக்கு சிறந்த வரவேற்பை அளித்தது. தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, ஆறாது சினம், தர்மதுரை, கடலை, பறந்து செல்லவா, குற்றமே தண்டனை, ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சாமி 2, செக்க சிவந்த வானம், வடசென்னை, விளம்பரம், மெய், நம்ம வீட்டு பிள்ளை, வானம் கொட்டட்டும், க/பெ ரணசிங்கம், திட்டம் ரெண்டு, பூமிகா, ரன் பேபி ரன், தீரா காதல் என கடந்த 10 ஆண்டுகளில் அபார வளர்ச்சியை அடைந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ் .
இதற்கிடையில் கனா படத்தின் மூலம் கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் நடிக்க தொடங்கிய அவர், நடப்பாண்டில் டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, ஃபர்ஹானா, தி க்ரேட் இந்தியன் கிச்சன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கதையில் தனது கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால் எப்படியான கேரக்டர் என்றாலும் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
ஆண்களை எனக்கு பிடிக்காதா?
இதனிடையே சமீபத்தில் பி.வி.ஆர். நிறுவனத்தின் தெற்கு மண்டலத் தலைவரான மீனா சாப்ரியா அவரின் வாழ்க்கையை சுயசரிதையாக புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். “UNSTOPPABLE” என பெயரிடப்பட்ட இந்த புத்தக வெளியிட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார். இதில் பேசிய அவர், 17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு மீனா சாப்ரியா போன்ற ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார்.
சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் “UNSTOPPABLE”ஆக இருப்பது தான் காரணம். அதையே மீனா அவர்கள் புத்தகத்தின் தலைப்பாக வைத்துள்ளார்.
ஆண்கள் பிடிக்காதா?
நான் புத்தகம் படிப்பது கம்மி தான். படத்தின் ஸ்கிரிப்ட் தான் அதிகம் படிப்பேன். இந்த புத்தகம் படிக்க வேண்டும் என நினைக்கிறேன். நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதியா? என்று கூட சிலர் கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவறானவர்கள் உள்ளனர், பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர் என வெளிப்படையாக பேசினார் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரின் இந்த பேச்சு அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது.